இடுப்பு கிள்ளி அரசியல்.. விஜய் மீது அண்ணாமலை வைத்த விமர்சனம்.. தவெக புஸ்சி ஆனந்த் கொடுத்த பதில்!
சென்னை: தவெக தலைவர் விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருப்பதாக அண்ணாமலை வைத்த விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பதில் அளித்துள்ளார். மக்கள் சேவை செய்வதே தவெகவின் பணி என்று கூறிய புஸ்சி ஆனந்த், யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜகவினார் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்தனர். இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் வீட்டில் இருந்து வெளியில் வந்த உடனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

அதில், தவெகவினர் ஸ்கூல் பசங்களை போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தவெக தங்களின் லிமிட்டை கிராஸ் செய்யக் கூடாது. நான் களத்தில் இருந்து போராடி கொண்டிருக்கிறேன். அவரை போல் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்-ஐ கடுமையாக விமர்சித்த அண்ணாமலைக்கு அக்கட்சியினர் சோசியல் மீடியாவில் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். மீம்ஸ், வீடியோ என்று தவெக சோசியல் மீடியாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விளாசி வருகிறார்கள். இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் அக்கட்சியினர் ஆய்வு நடத்தியுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து புஸ்சி ஆனந்த் பேசுகையில், மார்ச் 28ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இதில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான தவெக ஏன் போராட்டம் நடத்தவில்லை, ஆனால் போராடியவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதேபோல் தவெக தலைவர் விஜய் மீது அண்ணாமலை வைத்த விமர்சனம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புஸ்சி ஆனந்த், யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்.. எங்களின் தலைவர் விஜய் வழியில் மக்கள் சேவை செய்கிறோம். அதனால் விமர்சனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications