“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!
சென்னை: "திமுக ஆதரவோடு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த ஆட்சி, ஸ்டாலின் விரும்புகின்றவரை தான் பதவியிலே இருக்கும். நேற்று கூட திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். எனவே 6 மாத காலத்திற்கு மேலாக இந்த ஆட்சி நீடிக்காது" என அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன. இந்நிலையில் 6 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அடக்கத்தோடு பேச வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியாரைப் பற்றிப் பேசுவதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவிதமான தார்மீகத் தகுதியும் இல்லை என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்கிறேன்.
தமிழகத்திலே அதிமுகவில் 2 கோடியே 16 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலிலே கூட, அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே அமையப்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் 1 கோடியே 35 லட்சம் வாக்குகளைப் பெற்ற இயக்கம் அதிமுக.
அந்த இயக்கத்தினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார். இவர் எங்களுக்கு சான்றிதழ் தர வேண்டியதில்லை. எங்களுக்குப் பொதுமக்கள் உரிய அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள். 2 கோடியே 16 லட்சம் தொண்டர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியாரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கின்ற வாக்காளப் பெருமக்கள் 1 கோடியே 35 லட்சம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். இவர்களுடைய சான்றே எங்களுக்குப் போதுமானது. அற்பத்தனமாகப் பேசுகின்ற ஆதவ் அர்ஜுனாவின் சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை.
திமுக ஆதரவோடு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற இந்த ஆட்சி, ஸ்டாலின் விரும்புகின்றவரை தான் பதவியிலே இருக்கும். நேற்று கூட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகின்ற பொழுது, 'விரைவில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார்.
எனவே 6 மாத காலத்திற்கு மேலாக இந்த ஆட்சி நீடிக்காது என்று பொதுமக்கள் சொல்லுகிறார்கள், அதிகாரிகள் சொல்லுகிறார்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சொல்லுகிறார்கள். நடுநிலையாளர்கள் சொல்லுகிறார்கள். ஊடகவியலாளர்கள் சொல்லுகிறார்கள். எனவே 6 மாதத்திற்கு மேலாக இந்த ஆட்சி நீடிக்காது என்பதுதான் உண்மை.
நேற்றைய தினம் எடப்பாடியிலே நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்திலே பேசுகின்ற பொழுது கூட, எங்களுடைய இயக்கத்தினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் , ஆட்சியாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். 6 மாத காலத்திற்குள்ளாக இந்த ஆட்சி தூக்கி எறியப்படும் என்று சொல்லியிருக்கிறார். இதுதான் நிதர்சனமான உண்மை." எனத் தெரிவித்துள்ளார்.
"பேப்பரில் மட்டும் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒட்டு மொத்த அதிமுக மற்றும் தொண்டர்கள் தவெக-வில் தான் இருக்கிறார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலில் தவெக-வின் வெற்றி அதிமுக தொண்டர்களின் வாக்குகள் இல்லாமல் கிடைத்திருக்காது. அந்த மரியாதையும் அன்பும் எங்களுக்கு இருக்கிறது" என்று பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.












Click it and Unblock the Notifications