திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தவெக அரசு மதச்சார்பின்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக போல காழ்ப்புணர்ச்சி காட்டாமல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற வேண்டும் என்று, நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும், இந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை, முந்தைய தி.மு.க அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய த.வெ.க அரசின் நிலைப்பாடு குறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வரும், 22 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, த.வெ.க அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை, தமிழக மக்களிடம் தெளிவுபடுத்தும்.
எனவே, 'இது அனைவருக்குமான அரசு' என்று முழங்கிய முதல்வர் விஜய், இந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும். போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த தி.மு.க.,வை போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்து, தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, த.வெ.க அரசு, முந்தைய தி.மு.க., அரசை போல, மொழி, இனம் மற்றும் அரசியல் சாயங்கள் பூசி, பிரிவினைவாதம் செய்யாமல், தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை முழுதுமாக செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முந்தைய திமுக அரசு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், நடைமுறையைக் காரணம் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications