5 மாதத்தில் 5 முறை பின்வாங்கிய தவெக அரசு.. முதல்வர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் போதவில்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்து இன்னும் ஐந்து மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே அரசு பிறப்பித்த ஐந்துக்கும் மேற்பட்ட முக்கியமான அரசாணைகள் மற்றும் துறை சார்ந்த உத்தரவுகள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒரு அரசு முடிவெடுத்து வெளியிடும் உத்தரவுகளை, மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப் பின் உடனுக்குடன் திரும்பப் பெறுவது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லையா, அல்லது அதிகாரிகளின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டதா என்ற கேள்விகள் தற்போது வலுத்து வருகின்றன.

TVK

தகவல் அறியும் உரிமை சட்ட விவகாரம்: வெடித்த சர்ச்சை

இந்த விவகாரத்தில் அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது, தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) தொடர்பான முடிவுதான்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், பொதுத்துறைக்கு உட்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஆர்டிஐ (RTI) சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய தகவல்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்பதே இதன் பொருள்.

இந்த விவகாரம் செப்டம்பர் 27 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. முதலில் இதற்கு விளக்கம் அளித்த மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சாதி மற்றும் மத மோதல்கள் தொடர்பான மிக முக்கியமான ரகசிய தகவல்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நியாயப்படுத்தினார். ஆனால், இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தவெகவின் கூட்டணிக் கட்சிகளே இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதனால் வேறு வழியின்றி, அந்த அரசாணையை அரசு உடனடியாக திரும்பப் பெற்றது.

ஐந்து மாதங்களில் பின்வாங்கிய 5 முக்கிய முடிவுகள்

விஜய் அரசு பொறுப்பேற்ற மே மாதத்திலிருந்து தற்போது வரை தொடர்ச்சியாக பல முடிவுகளை அரசு திரும்பப் பெற்றுள்ளது:

1. ஜோதிடர் நியமனம்: கடந்த மே 12-ஆம் தேதி தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே, ஜோதிடரும் தவெக செய்தித் தொடர்பாளருமான ராதன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) நியமிக்கப்பட்டார். பொதுவெளியில் பெரும் விமர்சனம் எழுந்ததால், அடுத்த நாளே அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டது.

2. கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பட்டியல் சர்ச்சை: ஆகஸ்ட் 18 அன்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் எம். ஐயாசாமி என்பவர், அந்த தாலுகாவில் உள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினரின் பெயர், முகவரியைச் சேகரிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்ச்சை வெடித்த உடனே அன்றைய தினமே அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அந்த அதிகாரி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

3. கல்லூரி மாணவர்கள் போராட்டம் தடை உத்தரவு: அதே ஆகஸ்ட் மாதத்தில், இடதுசாரி அமைப்புகள் மற்றும் பிற அரசியல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என உயர் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என எதிர்ப்பு கிளம்பியதால், ஆகஸ்ட் 19 அன்று அதுவும் திரும்பப் பெறப்பட்டது.

4. செய்யாறு சிப்காட் நில எடுப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா கிராமத்தில், சிப்காட் தொழிற்பூங்கா 3-ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக 22.16 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த செப்டம்பர் 1-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படாது என விஜய் தேர்தல் காலத்திலும், ஆட்சிக்கு வந்த பிறகும் பலமுறை உறுதியளித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 18 அன்று இந்த அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டது.

5. சட்டம்-ஒழுங்கு ஆர்டிஐ விலக்கு: ஐந்தாவதாக, சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஆர்டிஐ விலக்கு அளித்த முடிவை அரசு திரும்பப் பெற்றது.

அரசியல் தலைவர்களின் கடும் கண்டனம்

ஆர்டிஐ விலக்கு உத்தரவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த கண்டனத்தை பதிவு செய்தனர்:

திமுக எம்.பி. கனிமொழி: சட்டம்-ஒழுங்கை முறையாக நிலைநாட்டத் தவறிய விஜய் அரசு, மக்களின் கேள்வி கேட்கும் உரிமையைப் பறிக்கப் பார்க்கிறது என்று விமர்சித்தார்.

சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் & பி. சண்முகம்: மக்களின் கண்காணிப்பில் இருந்து சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மறைப்பது தமிழகத்தை ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற்றும் முயற்சி என்றும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஆர்டிஐ உறுதி செய்வதால் இந்த முடிவு தவறு என்றும் வாதிட்டனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்: இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது; மனித உரிமை மீறல்களை மூடிமறைக்கவே இது வழிவகுக்கும் என்றார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்: இது தவறான முன்னுதாரணம்; ஆர்டிஐ சட்டத்தின் வரம்பை விரிவாக்க வேண்டுமே தவிர சுருக்கக் கூடாது என்றார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது பொதுமக்களின் உரிமை; இது நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது என்றார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: சட்டம் ஒழுங்கு எந்த அளவு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பதை அறிய தரவுகள் அவசியம்; அதை முடக்குவது நல்ல நிர்வாகம் அல்ல என்றார்.

கள எதார்த்தம்: அனுபவமின்மையா அல்லது அணுக முடியாத நிலையா?

மூத்த பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக கூறுகையில், "முதல்வருக்கு நிர்வாக அனுபவம் இல்லாததும், அவர் மற்றவர்களுக்கு எளிதில் அணுக முடியாத தலைவராக இருப்பதும் தான் இந்த தொடர் குழப்பங்களுக்கு காரணம். அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தவறு நடக்கும் போது விளக்கம் கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள். இவர்களது அமைச்சரவை சகாக்களுக்கும் போதிய அனுபவமில்லை, கற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. விஜய்யை முன்னிறுத்தினால் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள்.

அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்கள் ஆட்படக் கூடாது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் அமைச்சரவையும் தான் இறுதி அதிகாரம் கொண்டவர்கள் என்பதை அரசு நிலைநிறுத்த வேண்டும். தவறான வழியில் செல்லும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்," என்று கூறுகின்றனர்.

மக்கள் நலனுக்காக முடிவெடுப்பதும், தவறு என்று தெரிந்தால் அதைத் திருத்திக் கொள்வதும் தவறில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கொந்தளித்த பிறகு அரசு பின்வாங்குவது, புதிய தவெக அரசுக்கு போதிய அனுபவம் இல்லை என்பதையே காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+