ஆகா.. இதுதான் காரணமா? டெல்லிக்குப் பறந்த தவெக புள்ளி ஆதவ் அர்ஜுனா! அமித் ஷாவை பார்க்கவே இல்லையா?
சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அவர் டெல்லி பயணம் மேற்கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு சென்றது ஏன் என்பதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பிரச்சாரக் கூட்டம் எதிர்பாராத துயரத்தை ஏற்படுத்தியது. கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து த.வெ.க-வின் தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த சம்பவத்துக்குப் பிறகும் கட்சித் தலைவர் விஜய் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்
இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய தலைவர்களாகிய த.வெ.க-வின் ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதேசமயம், த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
ஆதவ் அர்ஜுனா
அவர் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும், அரசியல் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்காக, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், த.வெ.க பிரச்சார கூட்டங்களில் பதிவான பேருந்து கேமரா காட்சிகளை ஒப்படைக்க போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சூழ்நிலையில், ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆரம்ப தகவலின்படி, அவர் சொந்த அலுவல் பணிகளும், தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காகவே சென்றுள்ளதாக கூறப்பட்டது.
அமித்ஷா
பாஜக வட்டாரங்களுடன் நெருக்கம் கொண்டுள்ள தமிழகத்தின் ஒரு பிரபல பத்திரிக்கையாளர் மூலமாகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகவும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்மென்ட் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அதனைப் பெற பாஜக வேட்பாளர் ஒருவரும் ஆதவ் அர்ஜுனாவுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம்
மேலும், திமுகவை எதிர்க்க பாஜகவின் ஆதரவு அவசியம் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் ஒரு சாதாரண நிகழ்வல்ல, மாறாக த.வெ.க-வை எதிர்காலத்தில் என்டிஏ கூட்டணியுடன் இணைக்கும் அரசியல் முயற்சியாகவே பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் எந்த பாஜக தலைவரையும் ஆதவ் அர்ஜுனா சந்திக்கவில்லை எனவும் உண்மையிலேயே தன் அலுவல் சார்ந்த பணிக்காகத்தான் அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார் எனக்கூறி வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
கூடைப்பந்து தேசிய போட்டி
மேலும் இது தொடர்பான அழைப்பிதழ் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதாவது ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் 50வது சப் ஜூனியர் அளவிலான தேசிய கூடைப்பந்து போட்டிகள் தலைமையில் உத்தரகாண்டில் நடைபெறுகிறது. இதில் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் ரேகா ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில் அந்த போட்டிகளில் பங்கேற்க தான் ஆதவ் அர்ஜுனா சென்றிருப்பதாக அழைப்பிதழை பகிர்ந்து வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications