Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மண் ஒரு எரிமலை.. கை வச்சா என்னாகும் தெரியுமா? பாஜகவுக்கு எதிராக பாய்ந்து வந்த தவெக அருண்ராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ் மண் ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால் விளைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், பாஜக மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது" என தவெக கீழடி விவகாரத்தில் கடுமையாக பாய்ந்துள்ளது.

கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாக திமுக அரசைக் கண்டித்தும் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ்.

TVK Leader Arunraj Slams BJP for Withholding Keezhadi Report Criticizes DMK Govt

தவெக அருண்ராஜ் பரபர அறிக்கை

தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது. மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினை ஸ்ரீராமன் நிறைவு செய்தார்.

அதன் பிறகு கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. ட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழடி அகழாய்வு

இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,785 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. ASI இயக்குநர் நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.

பணியிட மாற்றம்

அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.

இந்தச் சூழலில் கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் சதி

மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஐ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும்.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஐ.க அரசு முயல்கிறது.

சிறு குழந்தைக்கும் தெரியும்

ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட ஒன்றிய பா.ஜ.க அரசு முயல்கிறது. யுகம் யுகமாக, காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று. ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால் விளைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால் அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

திமுக மீதும் தவெக விமர்சனம்

ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால். இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம் தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.கவின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.

கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன் வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.கவிற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையையும் போர்த்தி அழுக்காகிவிட இயலாது.

அத்தகைய முயற்சி செய்வோருடன் எவ்விதத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ துணைபோகும் சக்திகளும் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்பதை எங்கள் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+