அஞ்சலை அம்மாள் சிலை முன்பாக தவெக தலைவர் விஜய்.. “பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுப்போம்” என சபதம்!
சென்னை: அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பனையூர் அலுவலகத்தில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி அன்றைய தினம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பனையூர் தவெக அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்ட தியாகி, சமூக செயல்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதியாகச் செயல்பட்டவர். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சுமார் ஏழரை ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். 1937 மற்றும் 1946ல் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பணியாற்றினார்.
1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அதே போல் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களையும் தமிழகத்தில் முன்னெடுத்தவர். இவரது தைரியத்தை கண்டு வியந்த மகாத்மா காந்தி கடலூரின் வேலுநாச்சியார்என அஞ்சலை அம்மாளை குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications