ஜனநாயகன் தேர்தலுக்கு பிறகு ரிலீஸானால்! விஜய்யின் பெயரை மாற்றணும்! மத்திய அரசுக்கு தவெக வார்னிங்?
சென்னை: ஜனநாயகன் படத்தை தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு ரிலீஸ் செய்தால் டைட்டில் கார்டில் விஜய்யின் பெயரை எப்படி போட வேண்டியிருக்கும் என்பது குறித்து மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக தவெக நிர்வாகி ஒருவர் ட்வீட் போட்டுள்ளார்.

இதுகுறித்து தவெக மாணவரணியின் துணை அமைப்பாளர் (வடசென்னை தெற்கு) பிரேம்குமார் மூர்த்தி என்பவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்தின் தலைவர் அவர்களுக்கு ஜனநாயகன் படம் வெளியீடு குறித்து ஒரு சில விஷயங்களை கூறிக் கொள்கிறேன்.
அதாவது ஜனநாயகன் திரைப்படம் டைட்டில் கார்டு குறித்துதான் நாங்ள் பேசுகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவிட்டால், படத்தில் டைட்டில் கார்டில் "தளபதி விஜய்" என இருக்கும்.
இதே அந்த திரைப்படத்தை தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் செய்தால் டைட்டிலில் தளபதி விஜய் என்பதற்கு பதிலாக "மதிப்புக்குரிய தமிழக முதல்வர் விஜய்" என போட வேண்டியிருக்கும்.
படத்தை யார் தாமதப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் விளையாட்டுகளை நிறுத்த வேண்டிய நேரம், படத்தை ரிலீஸ் செய்யுங்கள். ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்வது பாஜகவின் கையில்தான் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், தனது ட்வீட்டை தேசிய பாஜகவுக்கும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விற்கும் டேக் செய்துள்ளார்.
நடந்தது என்ன?
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீட்டுச் சிக்கலைத் தொடர்ந்துள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக, ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், மேலும் தாமதத்தை எதிர்கொள்கிறது.
தவெக தலைவர் விஜய் நடிக்கும் இறுதிப் படமான 'ஜனநாயகன்'ஐ ஹெச். வினோத் இயக்கி, கே.வி.என். தயாரிக்கிறது. ஜனவரி 9ஆம் தேதி உலக வெளியீடு திட்டமிட்ட நிலையில், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து, மறு ஆய்வுக்கு அனுப்பியது.
வாரியத்தின் முடிவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷா, மறு ஆய்வுக் குழு பரிந்துரை உத்தரவை ரத்து செய்து, படத்துக்குச் சாதகமாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா அமர்வு தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்தது. அப்போது நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினர்: "குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்? சான்றிதழ் கிடைப்பதற்கு முன் வெளியீட்டுத் தேதியை ஏன் அறிவித்தீர்கள்? நீங்கள் அறிவித்ததற்காக எல்லோரும் உங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டுமா?"
வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனத்துக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தடை நீக்கி, சான்றிதழ் வழங்கக் கோரி மனுவில் வலியுறுத்தியது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. 'ஜனநாயகன்' தொடர்பான வழக்கில், தணிக்கை வாரியம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. இதனால், வாதங்களை நீதிமன்றம் கவனமுடன் கேட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. "இந்தத் தணிக்கை விவகாரத்திற்குள் நாங்கள் தற்போது நேரடியாகச் செல்ல விரும்பவில்லை; நீங்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு முன்பே சென்று முறையிட வேண்டும்" எனத் தெளிவுபடுத்தியது.
மேலும், ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. இத்தீர்ப்பு, படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது; காத்திருப்பு தொடர்கிறது.












Click it and Unblock the Notifications