சினிமா பாணியில்.. நிமிடத்திற்கு நிமிடம் நடக்கும் ட்விஸ்ட்.. பிரபல சேனலை வாங்க.. விலை பேசும் விஜய்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே டிவி சேனல் என்பது மிக முக்கியமான அரசியல் ஊடகம் ஆகும்.
ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தமான ஊடகம் என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது ஒரு வலிமையான போர்க்கருவி. அந்த வரிசையில், 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனது வாழ்வா சாவா போராட்டமாகக் கருதும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இப்போது ஒரு பிரம்மாண்டமான செய்தித் தொலைக்காட்சியைச் சொந்தமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

திரைப்படங்களில் வரும் விறுவிறுப்பான காட்சிகளைப் போல, இந்த ஊடகக் கொள்முதல் விவகாரத்திலும் பல திருப்பங்களும், நிபந்தனைகளும், ரகசிய சந்திப்புகளும் அரங்கேறி வருகின்றன.
இரண்டு சேனல்கள்; இரண்டு விதமான சிக்கல்கள்
தவெக தரப்பு தற்போது தமிழகத்தின் முன்னணியில் உள்ள இரண்டு செய்தித் தொலைக்காட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்த இரண்டு இடங்களிலும் வெவ்வேறு விதமான நடைமுறைச் சிக்கல்கள் முட்டுக்கட்டையாக உள்ளன.
முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட சேனலை வாங்குவதற்கு தவெக முன்வந்தபோது, அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பு குறித்த ஆய்வு (Technical Audit) நடத்தப்பட்டது. அதில், அந்தச் சேனலுக்குப் பலமான டிஜிட்டல் விற்பனைத் தளம் (Digital Sales Platform) இல்லாதது பெரும் குறையாகப் பார்க்கப்பட்டது. இன்றைய நவீன அரசியலில் 'இன்ஸ்டாகிராம்' மற்றும் 'யூடியூப்' தளங்களே வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு சேனல் வெறும் டிவியில் மட்டும் தெரிந்தால் போதாது, அதன் விளம்பர வருவாயும் செய்திகளும் டிஜிட்டல் முறையில் லாபகரமாக இருக்க வேண்டும். இந்த வசதி இல்லாததால், அந்தச் சேனலை வாங்குவதில் விஜய் தரப்பு தற்போது தயக்கம் காட்டி வருகிறது.
இரண்டாவது சேனலுடனான பேச்சுவார்த்தை சற்று முன்னேறிய நிலையில் உள்ளது. இங்கு ஒரு விசித்திரமான நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சேனலைத் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும், அதன் பெயரை மாற்ற முடியாது என்று தவெக தரப்பு அந்த செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது. இது ஒரு தந்திரமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே ஒரு சேனலை 'கட்சி சேனல்' என்று முத்திரை குத்தினால், நடுநிலை வாக்காளர்கள் அதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கனவே மக்களிடையே செல்வாக்குள்ள ஒரு பெயரிலேயே செய்திகளை வழங்கி, மெல்ல மெல்ல கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே விஜய்யின் திட்டம்.
எடிட்டர் நியமனம்: பின்னணியில் இருக்கும் அதிரடித் திட்டம்
தொலைக்காட்சி சேனலை வாங்குவது ஒரு பக்கம் என்றால், அதை வழிநடத்தப்போகும் 'ஆசிரியர்' (Editor-in-Chief) குறித்த தகவல் தான் ஊடக வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்.
தமிழகத்தின் மிகவும் பிரபலமான, ஒரு பெரிய அரசியல் பின்னணி கொண்ட ஊடக நிறுவனத்தில் எடிட்டராகப் பணியாற்றிய ஒரு நபர், சில மாதங்களுக்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் ஜான் மற்றும் ஆதவ் ஆகியோருடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகவும், முக்கியமான தகவல்களைப் பரிமாறியதாகவும் எழுந்த புகாரே அவரது நீக்கத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
தற்போது அந்தப் சர்ச்சைக்குரிய எடிட்டரைத் தனது புதிய சேனலின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தவெக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அந்த எடிட்டருக்கு இருக்கும் நெட்வொர்க் மற்றும் ஆளுங்கட்சியின் பலவீனங்களை அறிந்திருக்கும் திறன், தேர்தலுக்கு முன்பு தவெக-வுக்குப் பெரும் சாதகமாக அமையும் என விஜய் நம்புகிறார்.
ஊடக பலமே தேர்தல் பலம்
கூட்டணிகள் அமையாமல் தனித்து விடப்பட்டுள்ள தற்போதைய சூழலில், தனக்கான ஒரு ஊடகத்தை உருவாக்குவது மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், எதிர்தாக்குதல் நடத்தவும் ஒரே வழி என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்தத் தொலைக்காட்சி சேனல் ஒப்பந்தம் கையெழுத்தானால், தமிழகத்தின் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications