தவெக நண்பாஸ் மீட்டிங்கில்..விஜய்யோ ஷூட்டிங்கில்! கட்சியில் புஸ்ஸி ஆனந்த் ஆதிக்கம்! புலம்பும் ரசிகர்கள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விஜய் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள் மட்டுமே கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு அழைப்பில்லை என குற்றம் சாட்டுகின்றனர் சில மாவட்ட நிர்வாகிகள்.
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். கட்சியின் பெயரை அறிவித்தது தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை, மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என மிகவும் பிசியாகவே இருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரைப் பற்றி தான் பேசி வருகின்றனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விஜய் குறித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்:
கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பாஜகவைக் கொள்கை எதிரியாகவும், திமுகவை நேரடி எதிரியாகவும் விஜய் குறிப்பிட்டார். மேலும் கூட்டணிக்கு தயார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் வெளிப்படையாக அறிவித்தார். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை கொண்டு விஜய் தனியாக கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய்:
தற்போதைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கட்சியில் பதவி அளிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற இருக்கிறது.
மாவட்ட நிர்வாகிகள் நியமனம்:
மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
புஸ்ஸி ஆனந்த்:
இதுவரை ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்களே தற்போது கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவர்களாகவும் தங்களை கருதிக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆன்ந்தின் சில நடவடிக்கைகள் 'பழைய' நிர்வாகிகளை கடும் கோபமடைய செய்திருக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் நியமனம்:
குறிப்பாக இன்று நடைபெற்ற மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜய் கலந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் அவர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் நியமனம் நடைபெற இருக்கும் நிலையில் அது தொடர்பாக கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் பட்டியல்:
நிர்வாகிகள் பட்டியல் வெளியானவுடன் கட்சியில் சலசலப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நிர்வாகிகளை அழைத்து ஆனந்த் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கத்தில் நன்றாக செயல்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்க வேண்டும் என எங்கள் தலைவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
கட்சியினர் அதிருப்தி:
அதன் அடிப்படையில் தான் நாங்கள் அப்போது நடந்த கட்சியின் மாநாட்டுக்கு செலவு செய்து தொண்டர்களை அழைத்து சென்றோம். ஆனால் ஆனந்தின் நடவடிக்கைகள் ஏராளமான நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது ஆதரவாளர்களே அதிக பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். இதுகுறித்து தலைமைக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்தாலும் பொதுச் செயலாளரை மீறி விஜயை சந்தித்து பேச முடியவில்லை. ஏதாவது நிகழ்ச்சியில் தலைவரை சந்தித்து பேச முயற்சித்தாலும் அவர் விடுவதில்லை என்கின்றனர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications