‘ஒரு எம்எல்ஏவே முதலமைச்சரை பார்க்க முடியலை, இதெல்லாம் பிரச்சனையா’ - தவெக நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாடு அரசியலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் என்றாலே உள்கட்சி பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். ஆண்ட, ஆளும் கட்சிகள் தொடங்கி தவெக வரை விதிவிலக்கில்லை. சென்னை பனையூரில் திருநெல்வேலியை சேர்ந்த அஜிதா அக்னஸ் என்ற தவெக பெண் நிர்வாகி பதவி கிடைக்காத அதிருப்தியில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் சென்ற காரை மறித்துள்ளார். இதுதொடர்பாக தவெக மூத்த தலைவர் நிர்மல் குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நாங்கள் திமுகவை விட பெரிய கட்சி என்று நிர்மல் விளக்கமும் அளித்துள்ளார்.
அதன் பிறகு தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலையில் இருந்து கலைஞர் டிவி உள்பட 2, 3 யூனிட்களை போட்டு இந்த பிரச்சனையை செய்தி சேகரித்து வருகிறார்கள். முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தராத முக்கியத்துவத்தை இன்று காலையில் இருந்து பனையூரில் தங்கியதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை விட தவெக பெரிய கட்சி
கடந்த வாரம் அறிவாலயத்தில் ஒரு எம்எல்ஏவே உறுப்பினர் அட்டையை பிய்த்து தூக்கி வீசிவிட்டு சென்றார். முதலமைச்சரை சந்திக்க முடியவில்லை என்று எம்எல்ஏ கோபமானதை விட இது பெரிய பிரச்சனையா. நிர்வாகிகள் நியமனத்தில் ஒவ்வொருத்தருக்கும் மன வருத்தம் இருக்கும். நாங்கள் கட்சி தொடங்கி 2.5 வருடங்கள் தான் ஆகிறது. மக்கள் இயக்கமாக இருந்தபோது எல்லோருக்கும் பொறுப்பு இருந்தது.
எல்லோரும் ஒரே வயதில் இருக்கிறார்கள். அவரவருக்கு தகுந்த பொறுப்புகளை வழங்குவதில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அது சரி செய்யப்படும். திமுகவைவிட தவெக பெரிய இயக்கம். திமுகவில் இருப்பவர்களை விட இங்கு அதிக நிர்வாகிகள் உள்ளனர். திமுகவை விட எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள்.
திருமாவளவன் மீது விமர்சனம்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை தாண்டி எதுவும் செய்ய முடியாது. அங்கிருக்கும் திமுக எம்எல்ஏவே இதை பதிவு செய்துள்ளார். இங்கு அது போல இல்லை. இது ஜனநாயக கட்சி. யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டுமோ எங்கள் தலைவர் கொடுப்பார். திமுகவைவிட தவெக பெரிய கட்சி. அவரை எங்கள் தலைவர் அழைத்து பேசுவார். உரிய வழிமுறைகளை பின்பற்றி தீர்வு கொடுக்கப்படும்.
திருமாவளவன் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். திமுகவை அழிப்பதற்காக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் திருமாவளவன். அதன் பிறகு அவர்களை வெல்ல முடியாமல், சமரசமாகி திமுகவுடன் பயணித்து வருகிறார். அப்போது முதலே அவருக்கான முக்கியத்துவம் போய்விட்டது. தன்னை சார்ந்த மக்களுக்கு திருமாவளவன் என்ன செய்திருக்கிறார் என்றால் அரவால் எதுவும் சொல்ல முடியாது.
சிறுத்தை அல்ல பூனை
18,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6,000 பேர் இருக்க மாட்டார்களா. அவர்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுக்காமல், திமுகவை தீயசக்தி என்று சொல்வதற்காக எங்களை விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. திமுக மாவட்ட செயலாளர் போல திருமாவளவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
விசிக நிர்வாகிகளை பொருட்டாக திமுக மதித்து அமர்ந்து பேசுவதில்லை என்று அவர்களின் நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன் என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கிவிட்டு, அவரையும் அவர் கட்சியையும் திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார். அவரின் குறிக்கோளில் இருந்து மாறி சிறுத்தையாக இருந்து பூனையாக மாறிவிட்டார்." என்றார்.












Click it and Unblock the Notifications