விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி ஐகோர்ட் படியேறிய தவெக.. அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஐகோர்ட் நீதிபதி மறுத்துவிட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் சந்திப்பு, பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் பிரச்சாரம்
அந்த வகையில், கடந்த 13 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கிய இந்த நிகழ்வில், லட்சகணக்கானோர் திரண்டதால் திருச்சி நகரமே ஸ்தம்பித்து போனது. எனினும், கடுமையான கூட்ட நெரிசலால், திட்டமிட்டபடி அடுத்தடுத்த இடங்களுக்கு விஜய்யால் செல்ல முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க, தவெக பிரச்சாரம் மற்றும் மாநாடுகளுக்கு மட்டும் காவல்துறை பல்வேஉ கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாக தவெக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில், இதுதொடர்பாக தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விஜய்யின் திருச்சி பிரச்சாரக் கூட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகே காவல்துறை அனுமதி வழங்கியது. மற்ற அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு கடுமையான நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டுமே பாரபட்சமான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
சிறை மரணத்துக்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் நடந்த தர்ணா, கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி பூத் ஏஜெண்ட் கூட்டம், விக்கிரவாண்டி, மதுரையில் நடைபெற்ற மாநில மாநாடுகள் என எதிலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் அமைதியான முறையிலும் அவை நடத்தப்பட்டன." எனக் குறிப்பிட்டுள்ளார்.
போலீசாருக்கு உத்தரவிட கோரிக்கை
மேலும், “டிசம்பர் 20 ஆம் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் விஜய் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளித்துள்ளோம். மற்ற அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நிபந்தனைகளை போலவே, தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்துக்கும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக செப்டம்பர் 9 மற்றும் 15ஆம் தேதிகளில் காவல்துறை இயக்குநருக்கு தவெக சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது எந்தவொரு பதிலும் இதுவரை வரவில்லை. எனவே, எங்கள் மனுவை பரிசீலித்து உரிய அறிவுறுத்தலை போலீசாருக்கு வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிக்கும்படி நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு முறையிடப்பட்டது. ஆனால் நீதிபதி, மதியம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தவெக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications