சென்னையில் 2 நாட்கள் தவெக தலைவர் விஜய் பரப்புரை.. அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், வரும் 27 ஆம் தேதி வட சென்னையிலும், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தென் சென்னையிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு சென்னை மாவட்ட தவெக செயலாளர்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார். திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கிய விஜய், தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தார்.

பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் கடந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதி வரை விஜய் பிரசார பேருந்தில் வந்தார். சில நிமிடங்களில் சென்று விடும் தூரத்தை, அதாவது 7 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் கடந்து விஜய் வந்தார். வழி நெடுக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக இருந்ததால் விஜய்யின் பிரசார வாகனம் ஊர்ந்து சென்றது.
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து வந்ததால், மதியம் 2.30 மணிக்குத்தான் பிரசார இடமான காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தது. அங்கு சிறிது நேரம் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், பின்னர் அடுத்த பாயிண்ட் அரியலூர் நோக்கி புறப்பட்டார். அங்கும் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
முதல் பிரச்சாரத்தில் குழப்பம்
இதனால், அரியலூர் பிரசாரமும் தாமதம் ஆனது. நண்பகல் 12 மணிக்கு திட்டமிட்டு இருந்த பிரச்சாரம் இரவு 8 மணிக்கு மேல்தான் நடைபெற்றது. அரியலூர் பிரசாரத்தை முடித்துவிட்டு விஜய் குன்னம் வருகை தந்தார். குன்னம் பகுதியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் கடந்துவிட்டதால் விஜய் பேசாமல் கைகளை மட்டும் அசைத்தபடி சென்றார்.
பெரம்பலூரில் பேச விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நள்ளிரவுக்கு மேல் ஆனதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கிப் புறப்பட்டு சென்றது. இதனால், பல மணி நேரமாக விஜய்யை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் விஜய் பரப்புரை
இந்நிலையில், வரும் சனிக்கிழமை நாகை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொக்ள்கிறார் விஜய். விஜய்யின் பிரச்சார திட்டப்படி, வரும் 27 ஆம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளூர், வடசென்னையிலும் அடுத்த மாதம் 25 ஆம் தேதி (சனிக்கிழமை) தென்சென்னை, செங்கல்பட்டிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
இந்நிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27 ஆம் தேதி வட சென்னையிலும், அடுத்த மாதம் 25 ஆம் தேதி தென் சென்னையிலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு சென்னை மாவட்ட தவெக செயலாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீது காவல் ஆணையர் அலுவலம் விரைவில் முடிவெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications