தேர்தல் வியூகம் வகுக்கும் விஜய்.. ஜூலை 4 இல் மாநில செயற்குழு - புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
சென்னை: 2026 சட்டப் பேரவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் விஜயும் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக பரபரக்க தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருக்கும். வரும் தேர்தலில் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தமிழக வெற்றிக் கழகம். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தவெக தலைவர் விஜய் விரைவில் முழு நேர அரசியலில் இறங்க உள்ளார்.

வலுவான கட்சியை அமைக்கும் வகையில் கட்சிக்கான அனைத்து நிலை நிர்வாகிகளையும் தவெக நியமித்துள்ளது. தொழிற்சங்கத்திற்கான நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்படவுள்ளது. அதேபோல, தவெக தலைவர் விஜய் 45 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த சுற்றுப் பயணத்திற்கான முடிவை தலைமை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவுக்கான கட்சி சின்னம் கிடைத்த பின்னர், மக்களை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது தவெகவின் சின்னத்தை மக்களிடம் சென்றால் தேர்தல் வெற்றிக்கு எளிமையாக இருக்கும் என்று கருதி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருகிறாராம். முதலில் கட்சியை வலுப்படுத்திவிட்டு பின்னர் சுற்றுப் பயணம் வைத்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநரத்தில், பொதுமக்களின் பிரச்சனைகளைக் கையிலெடுத்து போராட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்த நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதைத்தொடரந்து, வேலூரில் ஜூலை 2 ஆவது வாரத்தில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து, தர்மபுரியிலும் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும். நம் வெற்றித் தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
எனவே. கழகச் சட்ட விதிகளின்படி மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள்/கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள். கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications