விசிக எனக்கு முகவரி கொடுத்தது.. என் கொள்கை ஆசான் திருமாவளவன் தான்.. ஆதவ் அர்ஜுனா அந்தர் பல்டி!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தான் என்னுடைய கொள்கை ஆசான் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திருமாவளவனின் மாணவர் நான் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, எனக்கான முகவரியை கொடுத்ததே விசிக தான் என்றும் பேசியுள்ளார்.
அண்மையில் ஜனவரி 25ஆம் தேதி தவெக செயல் வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், விசிக தலைவர் திருமாவளவனை அடியாளை போல் திமுக பயன்படுத்துகிறது. விசிகவுக்கு தொண்டர் பலம் இல்லை.. அந்தக் கட்சியின் தொண்டர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். விசிகவில் இருப்பதே 20 பேர் தான் என்று ஆவேசமாக பேசினார்.

இது சர்ச்சையை உருவாக்கியது. விசிகவில் இணைந்த உடன் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்த திருமாவளவனை மோசமாக விமர்சித்தது அக்கட்சி தொண்டர்களால் ரசிக்கப்படவில்லை. இதையடுத்து ஆதவ் அர்ஜுனா நாவினை அடக்கி பேச வேண்டும் என்று பலரும் கருத்து பதிவிட்டனர். இதன் காரணமாக உடனடியாக ஆதவ் அர்ஜுனா தனது கருத்து திரிக்கப்பட்டதாக பின் வாங்கினார்.
இந்த நிலையில் சென்னையில் தவெகவின் சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை 15 வயதிலேயே தலைவராக ஏற்றுக்கொண்டு பயணித்தேன். ஆனால் கடந்த 2 நாட்களாகவே சில விமர்சனங்கள்.. விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியது என்னுடைய கடமை.
விசிகவில் 20 பேர் திருமாவளவனுக்கு தவறான தகவல் கொடுத்து, விஜய்க்கு எதிராக பிரச்சாரத்தை கட்டமைக்கக்கிறார்கள் என்று தான் சொல்ல வந்தேன். அதனை முழுமையாக சொல்லவில்லை. என்னுடைய கொள்கை ஆசான் திருமாவளவன் தான். எனக்கு முகவரி கொடுத்தது அவர்தான். எப்போதும் நன்றியை மறக்க மாட்டேன். சிபிஐ, சிபிஎம் கட்சி கொள்கைக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆனால் அரசியல் ரீதியாக பிரச்சனை இருக்கிறது. 4 ஆண்டுகளாக விசிகவுக்கு எந்த வாரியப் பதவிகள் அளிக்கப்பட்டது.. திருமாவளவனுக்கு என்ன மரியாதை அளிக்கப்பட்டது? திமுகவின் சூழ்ச்சிகளுக்கு பதில் அளித்து கொண்டே இருப்போம்.. என்னைப் பற்றி திருமாவளவனுக்கு நன்றாக தெரியும்.. அவர் என்றும் எனக்கு ஆசிரியர்.. அவரின் மாணவன் நான் என்று தெரிவித்துள்ளார்.
இப்போது என்று அல்ல.. ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு மேடையிலும் உளறுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். ஏற்கனவே செந்தில் பாலாஜியை திட்டுகிறேன் என்ற பெயரில் ரவுடி என்று அழைத்து சிக்கலில் மாட்டினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் கைதுக்கு பயந்து ஓடி ஒழிந்ததாக திமுகவினரை கொந்தளிக்க வைத்தார். தற்போது திருமாவளவனை அட்டாக் செய்துவிட்டு அந்தர் பல்டி அடித்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications