சீனியர்கள் இருக்க! தவெகவின் முதல் வேட்பாளராக அருண்ராஜ் ஏன்? விஜய் டிக் அடிக்க காரணம் இதுதான்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடக்கும் நிலையில் தவெகவின் முதல் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது. அதிலும் முதல் வேட்பாளர் அருண்ராஜ் என்கிறார்கள். அவர் திருச்செங்கோட்டில் போட்டியிடுகிறாராம். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் இருக்க, அருண்ராஜ் ஏன முதல் வேட்பாளர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டம் திருச்செங்கோட்டில் தவெக சார்பில் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வைத்து முதல் வேட்பாளர் யார் என்பதை விஜய் அறிவிக்கிறாராம். அவர் திருச்செங்கோட்டிற்கு செல்லவில்லை. ஆனால் வீடியோ காலில் அறிவிக்கிறார் என்கிறார்கள்.
எத்தனையோ சீனியர்கள் கிடக்க ஏன் அருண்ராஜ் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யுடன் அருண்ராஜுக்கு ஏற்பட்ட நட்பால், தனது ஐஆர்எஸ் (வருமான வரித் துறை அதிகாரி) பணியை விட்டுவிட்டு தவெகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த அருண்ராஜ்
இவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். சேலத்தில் படித்தார். பின்னர் சென்னையில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார். அருண்ராஜின் மனைவியும் மருத்துவராம். இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் பீகாருக்கு மாற்றப்பட்டார் அருண்ராஜ்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது கூட அவருடன் இவர் நெருக்கம் காட்டினாராம். ஆனால் அவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் அருண்ராஜ் ஏமாற்றமடைந்தார் என சொல்லப்படுகிறது.
வருமான வரித் துறை அதிகாரி
2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கூட விஜய் நெய்வேலி படப்பிடிப்பு இருந்தார். அங்கு ரெய்டுக்கு போனவர் அருண்ராஜ்தான்.
விஜய்க்கு எதிரான பிரச்சினை
அந்த சமயத்தில் விஜய்க்கு எதிரான பிரச்சினைகளை அருண்ராஜ்தான் சரி செய்து கொடுத்தாராம். அது முதல் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறாராம். விஜய் கட்சி தொடங்கிய காலம் முதலே அவருடன் அருண் நெருக்கம் காட்டி வருகிறாராம். மேலும் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் இவர் உதவியுள்ளாராம்.
நேர்மையான அதிகாரி
அருண்ராஜ் நேர்மையான அதிகாரியாக இருந்தவர், அவர் திறமைசாலி என்பது விஜய் மனதில் நன்கு பதிந்துள்ளதாம். இதனால்தான் அவரை கொங்கு மண்டலத்தின் தவெகவின் முகமாக நிறுத்தலாம் என விஜய் முடிவு செய்து அதற்கான முதல் வேட்பாளரையும் இன்று அறிவிக்கிறாராம்.
கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் கூட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஓடி ஒளிந்த போது கூட விஜய்க்கு துணையாக இருந்து அருண்ராஜ்தான் நிறைய ஆலோசனை கூறினாராம். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு அருண்ராஜ் நேரில் சென்று விஜய்யுடன் வீடியோ காலில் பேச வைத்திருக்கிறார்.
கரூர் சம்பவம்
கரூர் சம்பவத்தால் விஜய்யை பல்வேறு கட்சிகள் விமர்சித்தன. ஆனால் அருண்ராஜின் முயற்சியால்தான் கரூர் மக்களுக்கு தம் மீது கோபம் இல்லை என்ற செய்தி விஜய்க்கு கிடைத்தது. சமூகவலைதளங்களில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அருண் ராஜ் மீது அப்படி எல்லாம் இல்லை.
திருச்செங்கோடு தொகுதி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது திருச்செங்கோடு சட்டசபை தொகுதி. இங்கு எம்எல்ஏவாக இருப்பவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ஈஸ்வரன். இவர் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்றார். இந்த தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், தலித்துகள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அருண்ராஜ், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது மனைவி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் அவர் அங்கு போட்டியிட விரும்புகிறாரா என தெரியவில்லை. இந்த தொகுதியில் திமுக இரு முறையும், அதன் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஒரு முறையும் வென்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு முறை வென்றுள்ளது. ஆனால் அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications