Karur Stampede: 20 நாள் கழித்து 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் 39 குடும்பத்தினருக்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை தலா ரூ 20 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தி வரவு வைக்கப்பட்டது.

கரூருக்கு விஜய் செல்லும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் நேரிலேயே நிவாரண நிதியை வழங்குவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது 39 பேருக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை (RTGS) மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இறந்த 41 பேரில் 39 பேருக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மீதம் 2 பேர் இறந்த பிரித்திக், சந்திரா ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இவர்களது மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
பிரித்திக்கின் தந்தை
பிரித்திக்கின் தந்தை பன்னீர் செல்வம் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அவர் தன்னை பிரிந்து சென்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பணத்திற்காக இந்த வழக்கை போட்டுள்ளார் என சிறுவனின் தாய் ஷர்மிளா எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வீடியோ மூலம் ஆஜரானார். சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் கரூர் மாவட்ட தவெகவினரை தொடர்பு கொண்டு என் பெயரிலேயே செக் போட்டுக் கொடுங்கள் என தொந்தரவு செய்வதாகவும் ஷர்மிளா குற்றம்சாட்டியிருந்தார்.
வேலைனு சொல்லி கையெழுத்து
அது போல் சந்திராவின் கணவர் செல்வராஜுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கையெழுத்து வாங்கி அவர் பெயரில் போலியாக வழக்குத் தொடுத்ததாக கூறியும் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் செல்வராஜும் வீடியோ மூலம் ஆஜரானார்.இவர்களது மனுக்கள் போலி என தெரியவந்தால் அது குறித்து சிபிஐ விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
நடந்தது என்ன
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த விஜய்யை பார்க்க முண்டியடித்த போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதல்வர் நிவாரணம்
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும் வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
விஜய் நிவாரண அறிவிப்பு
இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 20 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சமும் வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
வீடியோ கால்
இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விஜய்க்கு சாதகமாக வந்துவிட்டதால் அவர் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு தனது கட்சி சார்பில் அறிவித்த நிவாரணத்திற்கான காசோலையை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
20 நாள் கழித்து நிவாரணம்
ஆனால் தற்போது 39 பேரின் குடும்பத்தினருக்கு ஆன்லைன் மூலம் தலா ரூ 20 லட்ச நிவாரணத்தை விஜய் வழங்கியுள்ளாராம். இதற்காக ரூ7.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. நிவாரணம் என்பது உடனடியாக வழங்கக் கூடியது. அப்போதுதான் அந்த மக்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் விஜய்யோ 20 நாட்கள் கழித்து இந்த நிவாரணத்தை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications