விஜய்யை முடக்க நடக்கும் முயற்சி.. தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய தவெக போராட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக போராட்டம் தொடங்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடந்து வருகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்பின் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்த தமிழக அரசு தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதனை பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்ட சூழலில், தவெக மட்டும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றிருக்கிறது.

அதேபோல் தவெக நடத்தும் ஒவ்வொரு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திலும் தமிழக அரசு எஸ்ஓபி மூலமாக தங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் 3 கோரிக்கைகளை தவெக வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தரப்பில், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துவதாக தெரிவித்திருக்கிறார்.
தவெகவின் இந்த போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தவெக சார்பாக வேட்பாளர்களின் நேர்காணல் நடந்து வரும் சூழலில், மாவட்டச் செயலாளர்கள் தங்களின் பவரை காட்டுவதற்காக பெரியளவில் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் விஜய் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications