கர்நாடகாவில் Thug Life வெளியிடாவிட்டால்.. ஒரு கன்னட படம் கூட தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது! வேல்முருகன்
சென்னை: தமிழ் மொழியில் இருந்து தோன்றியதை கன்னட மொழி என்ற நடிகரும், மநீம கட்சி தலைவரும் கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடாவிட்டால், தமிழ்நாட்டில் கன்னட படங்களை வெளியிட முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் என்கிற திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால், திரைப்படம் வெளியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தவாக ஆதரவு
அதன் அடிப்படையில், சமீபத்தில் நடந்து முடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட சிவராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய கமல்ஹாசன், சிவராஜ்குமார் குடும்பத்தினர் என் குடும்பம் தான் என்றும் தமிழிலிருந்து வந்ததுதான் கன்னடம் என்றும் கூறியிருந்தார்.
கர்நாடகாவில் எதிர்ப்பு
கமல்ஹாசனின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில், காங்கிரஸ், பாஜக என்ற கட்சி வேறுபாடின்றி, அவர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்க விட்டால் திரைப்படம் வெளியாகாது என்றும் கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம்
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா, பாஜகவைச் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர், கமல்ஹாசனுக்கு கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர். தமிழ் மொழியில் இருந்து உருவானது தான், மலையாளம், கன்னடம், துளு, குடகு, தோடா, கோத்தா, கொரகா, இருளா போன்ற மொழிகள் என மொழி அறிஞர்களே தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர்.
இனப்பிரச்சனை
தமிழறிஞர்கள் மட்டுமின்றி, கன்னடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களே, தமிழில் இருந்து தான், கன்னடம் பிறந்தது என்பதை ஏற்று இருக்கிறார்கள். இந்த அடிப்படை உண்மை என்பது, கர்நாடக அரசுக்கோ, கல்வியாளர்களுக்கோ நன்றாக தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு என்பது, மொழியிலான சிக்கல் மட்டுமின்றி, இனங்களுக்கிடையேயான பிரச்சினையாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கன்னடர்களின் பாசம்
தமிழ்மொழியின் தொன்மை, வளமை, ஐயாயிரம் ஆண்டுகாலத் தமிழர் வரலாற்றின் பெருமிதங்கள் அனைத்தையும் அறிந்த கன்னடர்கள் தங்கள் நெஞ்சில் தமிழர்களுக்கெதிரான பொறாமை உணர்ச்சியையும் போட்டி மனப்பான்மையையும் தீயாய் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வடவரா - தமிழரா என்றால் வடவர் மேல் அன்பு செலுத்துவார்கள் கன்னடர்கள். தமிழர்களைப் பகைவராகப் பார்ப்பார்கள்.
தமிழர் எதிர்ப்பு அரசியல்
தமிழா, சமஸ்கிருதமா என்றால், சமஸ்கிருதத்தை ஆதரிப்பார்கள் கன்னடர்கள். தமிழை எதிர்ப்பார்கள். அதேபோல் இந்தியையும் ஆதரிப்பார்கள். தமிழர் எதிர்ப்பு அரசியல்தான் கர்நாடகத்தின் பொதுவான அரசியல். இதன் நீட்சி தான் கமல்ஹாசனுக்கான எதிர்ப்பும். தற்போது, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மன்னிப்புக் கேட்கவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடாமல் தடை செய்வோம் என்கிறார்கள்.
கமல்ஹாசனுக்கு பாராட்டு
இருப்பினும், மன்னிப்புக் கேட்க முடியாது என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறது. அதே நேரத்தில், இவ்விவகாரத்தில் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழர்கள் இருக்கிறார்கள். உங்களை கைவிட மாட்டார்கள்.
வேல்முருகன் வார்னிங்
கர்நாடகத்தில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வெளியிட அனுமதிக்காவிட்டால், தமிழ்நாட்டிலும் ஒரு கன்னடம் திரைப்படம் கூட வெளியிட முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது. கலைக்கு மொழி, இனம், தாயகம் முக்கியமில்லை என அறிவுஜீவிகள் கூறுவார்கள். அவர்களின் கூற்று தவறு. கலைக்கு மொழி, இனம், தாயகம் இருக்கிறது. இதற்கு கன்னடர்களின் போராட்டமே சான்று. இப்போதும் கூறுகிறோம், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications