முன்னாள் ஐஜி தலைமையில் குழு.. தவெக தொண்டர்களை வழிநடத்தும் காவல் அதிகாரிகள்.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை: தவெக தொண்டர் அணிக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக 10க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், முன்னாள் துணை ஆணையர், முன்னாள் டிஎஸ்பி-க்கள் என்று ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. கரூர் சம்பவத்தில் பாதிப்படைந்த மக்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின் அடுத்த நாள் முதலே நிர்வாகக் குழு அமைத்து உத்தரவிட்டதோடு, அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார்.

அதேபோல் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்கவும் பல்வேறு ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட இருக்கும் நிலையில், விஜய் பிரச்சாரத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறார். அதற்கு முன்பாக நவம்பர் 5ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு நடக்கவுள்ளது.
இதனிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர் அணிக்கு வழிகாட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை கொண்டு தொண்டர்களுக்கு வழிகாட்ட விஜய் முடிவு எடுத்துள்ளார்.
இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் டிசி அசோகன், முன்னாள் டிஎஸ்பி ஷபிபுல்லா, சிவலிங்கம் உள்ளிட்ட 10 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பிரச்சார நேரங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை இந்த குழு வழங்கி இருப்பதாக தெரிகிறது.
தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு போதுமான அரசியல் அனுபவம் இல்லாததால் இந்த முடிவை விஜய் எடுத்து செயல்படுத்த உள்ளார். ஏற்கனவே தவெக நிர்வாகிகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அடுத்தக் கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலமாக தவெகவின் அடிப்படை கட்டமைப்பு மோசமான உள்ளதை கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் உணர்ந்திருக்கிறார். இதன் காரணமாகவே அடுத்தடுத்து விஜய் தரப்பில் பல்வேறு ஆலோசனை நடத்தப்பட்டு, அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த பணிகள் நடந்து வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications