Vijay Speech: போதைப் பொருளை போல சாதி, மதத்தை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும்.. மாணவர்களிடையே விஜய் பேச்சு!
சென்னை: இன்று விஜய் 10 மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாகச் சாதி, மதத்தை வைத்துப் பிரிவினை வளர்க்கும் அந்த சிந்தனை பக்கமே போக வேண்டாம் என்றும் போதைப் பொருட்களைப் போல இதையும் அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவெக கட்சித் தலைவர் விஜய் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மார்க் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகளை வழங்குவதாக வழக்கமாக வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவ - மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கி வருகிறார்.

விஜய் நிகழ்ச்சி
இந்தாண்டும் மூன்றாவது ஆண்டாக விஜய் மாணவ- மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். எப்போதும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கே பரிசுகள் வழங்கப்படும். அதன்படி இன்றைய தினம் முதற்கட்டமாக 88 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விஜய் மாணவர்கள், பெற்றோர்களுடன் முதலில் போட்டோ எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சாதி, மதத்தை வைத்துப் பிரிவினை வளர்க்கும் அந்த சிந்தனை பக்கமே போக வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சாதி மத பிரிவினை
இந்த கூட்டத்தில் பேசிய விஜய், "சாதி, மதத்தை வைத்துப் பிரிவினை வளர்க்கும் அந்த சிந்தனை பக்கமே போய்விடாதீர்கள். அந்த சிந்தனை உங்களையோ உங்கள் மனதையே டிஸ்டர்ப் பண்ணக் கூட விடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி, மதம் பார்த்தா பொருட்களை விளைவிக்கிறார்கள்? தொழிலாளர்கள் என்ன சாதி, மதம் பார்த்தா பொருளை உற்பத்தி செய்கிறார்கள்? அவ்வளவு ஏன் இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கா? மழை இருக்கா?
போதை பொருட்களைப் போல!
எப்படி போதைப் பொருட்களை நாம் அறவே ஒதுக்கி வைக்கிறோமோ.. அதைச் சாதி, மதத்தையும் நாம் ஸ்ட்ரிட்டாக தூரமாக ஒதுக்கி வைக்க வேண்டும். எவ்வளவு முடியுமா அவ்வளவு தூரமாக ஒதுக்கி வைக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.
சமீபத்தில் பெரியார் படத்திற்கே கூட சாதி சாயம் பூச முயன்றனர். மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் கூட பெரியாருக்குச் சாதி சாயம் பூசுவது போல ஒரு கேள்வியைக் கேட்டிருந்தனர். இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த உலகில் எது சரி, எது தவறு என்பதை அனாலஸிஸ் செய்து பார்த்தாலே குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழலாம். எதற்கும் ரொம்ப எமோஷனல் ஆக வேண்டாம். அவ்வளவு வொர்த் இல்லை" என்றார்.
விஜய் பேச்சுக்குக் கண்டனம்
போதைப் பொருட்களைப் போல இதையும் அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்று விஜய் பேசியிருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது. அவரது பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் விஜய்யின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications