வேலூரில் பிப்ரவரி 23ல் விஜய் பிரச்சாரம்.. 33 ஏக்கரில் தயாராகும் மைதானம்.. கூடப்போகும் 25 ஆயிரம் பேர்
வேலூர்: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி வேலூரில் நடக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காக 33 ஏக்கர் கொண்ட அகரம் சேரி பகுதியை தவெகவினர் சுத்தம் செய்து வரும் சூழலில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி கடிதம் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சேலம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். மதியம் 12 முதல் 3 மணி வரை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால், வெயில் தாங்க முடியாமல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்பவர் உயிரிழந்தார்.

வேலூர் வரும் விஜய்
சூரஜ்ஜின் உயிரிழப்புக்கு தவெக தலைவர் விஜய் சார்பாக ஒரு இரங்கல் கூட சொல்லப்படவில்லை. இந்த நிலையில் தவெக அடுத்ததாக வேலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி தவெக தலைவர் விஜய் வேலூர் மாவட்டத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இதற்கான அனுமதி கோரி தவெக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் போலீசாரிடம் கடிதம் அளித்துள்ளார்.
என்னென்ன வசதி?
இதையடுத்து காவல்துறை தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்பதாக கூட பொதுக்கூட்டத்திற்கான பணிகளை தவெகவினர் தொடங்கி இருக்கின்றனர். மொத்தமாக 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பார்க்கிங் வசதி, தண்ணீர் வசதி, மருத்துவக் குழு, தீயணைப்பு வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
33 ஏக்கர் மைதானம் ரெடி
மொத்தமாக அகரம்சேரி பகுதியில் உள்ள 33 ஏக்கர் மைதானத்தை தவெகவினர் தயார் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்த மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வந்தது. விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஏதாவது ஒரு அசம்பாவிதங்கள் நடந்து வருவதால், இம்முறை கூடுதல் எச்சரிக்கையுடன் கூட்டத்தை நடத்துவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து வேகம் காட்டும் விஜய்
கரூர் சம்பவத்திற்கு பின் காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட இடங்களில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். தற்போது வேலூர் மாவட்டத்திற்கு விஜய் முதல்முறையாக வரவிருக்கிறார். இதனால் விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கவும் தவெகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications