முடங்கி கிடக்கும் விஜய்க்கு.. லட்டு மாதிரி தேடி வந்த வாய்ப்பு.. பயன்படுத்துனா சக்ஸஸ் நிச்சயம்! ஆனால்!
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து இருப்பது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சாதகமாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.

இப்போது அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கப்பட்டு இருக்கிறார்.
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
செங்கோட்டையன் சந்திப்பு
இந்த நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
விஜய்க்கு சாதகம்
இப்படி அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து இருப்பது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சாதகமாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
1. அதிமுகவின் கூட்டணி அழைப்பை விஜய் ஏற்கவில்லை. அதிமுக உடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இருப்பது போன்றும் தோன்றவில்லை.
2. இதனால் விஜய்க்கு அடுத்த வாய்ப்பு தனியாக கட்சியை வலிமை செய்வது, தனியாக கூட்டணி அமைப்பது.
3. ஆனால் விஜய் தரப்பில் வலுவான கூட்டணி இல்லை, தலைவர்கள் இல்லை. கரூர் விவகாரத்தை விஜய் கையாண்ட விதமும் அவருக்கு ஆலோசனை சொல்ல நல்ல தலைகள் இல்லை என்பதையே காட்டுகிறது.
4. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். செங்கோட்டையன் இதனால் அதிமுகவில் இருந்து கூட நீக்கப்படலாம். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
5. ஏற்கனவே ஓபிஎஸ் வெளியே உள்ளார். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனின் அமமுக தனியாக உள்ளது. இவர்களை தவெக உடன் இணைப்பது, தவெக கூட்டணியில் இணைப்பது விஜய்க்கு சாதகமாக மாறலாம்.
6. இவர்களை மொத்தமாக உள்ளே கொண்டு வந்தால் கொங்கு மண்டலத்திலும்.. டெல்டாவிலும், தென் மண்டலத்திலும் முக்குலத்தோர் மட்டுமன்றி கவுண்டர்கள் தரப்பு ஆதரவும் விஜய்க்கு வரும்.
7. எடப்பாடி முடங்கி இருக்கும் நேரத்தில்.. விஜய் உள்ளே புகுந்து ஆட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு முதலில் விஜய் பனையூரை தாண்ட வேண்டும். இப்போது கேள்வியாக இருப்பதே.. விஜய் வெளியே வருவாரா என்பதுதான்!












Click it and Unblock the Notifications