தேர்தல் ஆணையத்திற்கு விஜய் அவசரக் கடிதம்: "வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும்"
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நேரத்தை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சொந்த ஊர் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் சாமானிய பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவதால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக இரவு 8 மணி வரை வாக்குப்பதிவை நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 17.69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதாவது 2 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் வாக்களித்திருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சிவகார்த்திகேயன், கருணாஸ் உள்ளிட்ட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர். இது வாக்காளர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படியான சூழலில் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் இன்னும் சில பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மட்டுமல்லாமல் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து பிரச்சனை இருக்கிறதோ, அங்கு கூடுதல் ஊழியர்களை நியமித்து பணிகளை முடுக்கிவிட வேண்டும். அதேபோல் பாதிக்கப்படும் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து, வாக்குச்சாவடியில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைமுறையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவு விகிதத்தில் பின்னடைவை உருவாக்கலாம். இதனால் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கண்காணித்து வாக்குப்பதிவு நடைமுறையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications