புஸ்ஸி ஆனந்த் vs ஆதவ் அர்ஜுனா.. தவெகவில் வெடித்த அதிகார மோதல்.. 2வது இடத்திற்கு போட்டி!
சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடையில் அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட தவெக பேனரில் ஆதவ் அர்ஜுனா படத்தை வைத்ததாக கூறி வட்டசெயலாளர் பிரதீப் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் சுமார் ஒரு மாதமாக தவெக நிர்வாகிகள் தலைமறைவான சூழலில், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளனர். குறிப்பாக செங்கோட்டையன் இணைவுக்கு பின் தவெக கட்சி ரீதியிலான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ஆனால் செங்கோட்டையனின் இணைவே தவெகவில் புதிய பிரச்சனையை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் செங்கோட்டையனுக்காக மட்டுமே இதுவரை வீடியோ வெளியிட்டு வரவேற்றார். இதன் காரணமாக புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான முக்கியத்துவம் செங்கோட்டையனுக்கு கிடைத்து வருகிறது. அதேபோல் விஜய்யுடன் நெருக்கமாக இருந்த ஆதவ் ஆர்ஜுனா தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செங்கோட்டையனின் வருகைக்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையில் மோதல் இருந்து வந்தது. கரூர் சம்பவத்தின் போது புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிய போது, வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் மூலமாக ஆதவ் அர்ஜுனா எதிர் பிரச்சாரத்தை செய்தார்.
இதனால் சோசியல் மீடியாவில் தவெக தொண்டர்கள் பலரும் புஸ்ஸி ஆனந்தை விமர்சிக்க தொடங்கினர். இதற்கு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த்-க்கு இருக்கும் ஆதரவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட தவெக பேனரில் ஆதவ் அர்ஜுனா படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக வட்டச் செயலாளார் பிரதீப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விஜய், ஆனந்த் புகைப்படங்களை தவிர மற்றவர்கள் படங்களை பயன்படுத்த கூடாது என கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் அதிகார மோதல் வெடித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications