ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்!
சென்னை: தவெக தலைவர் விஜய், வேட்பாளர் அறிமுக கூட்டத்தை இன்று சென்னையில் நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், இளைஞர்களுக்கான சில முக்கிய வாக்குறுதிகளை விஜய் அறிவித்துள்ளார். 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்க தாமதம் ஏற்பட்டால் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி, வரும் சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் போட்டி என அறிவித்துள்ளார். முன்னதாக, இளைஞர்களுக்கான சில வாக்குறுதிகளை வெளியிட்டார் விஜய்.
தவெக வாக்குறுதிகள்
போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும்.
கல்வி உத்தரவாத திட்டம்: இளைஞர்கள் கல்வியை உறுதி செய்ய 12 ஆம் வகுப்பிற்கு பின் பிஎச்டி வரை படிக்க ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு நிலையான ஆள் சேர்ப்பு அட்டவணை தயாரிக்கப்படும்.
29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு வழங்க தாமதம் ஏற்பட்டால் மாதம்தோறும் பட்டதாரிகளுக்கு ரூ. 4 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.
ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும். இதில் பட்டதாரிகளுக்கு மாதம் 10000 ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.
நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் 25 லட்ச ரூபாய் அளவுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பில் நம் இளைஞர்களுக்கே முன்னுரிமை. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியில் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இளைஞர்கள் தங்களின் கருத்துகளை இதில் தெரிவிக்கலாம்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை உலகளவில் பரப்ப நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும். ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார் விஜய்.












Click it and Unblock the Notifications