புதுசா என்ன செய்யணும்.. ஆம் ஆத்மி ஸ்டைலை பின்பற்றுகிறதா தவெக? விஜய் வார்த்தையால் எழுந்த கேள்வி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அடிப்படை வசதிகளை சரியாக செய்வோம் என்று தொடர்ந்து கூறி வருவது, அக்கட்சி ஆம் ஆத்மி பாணியிலான அரசியலை பின்பற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாற்றாக தவெக இருக்கும் என்று கூறும் விஜய், புதிய திட்டங்கள் அல்லது புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் அடிப்படை கட்டமைப்புகளை மட்டுமே செய்வோம் என்று கூறி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 3வது கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாமக்கல் கேஎஸ் தியேட்டர் அருகில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் சுமார் 17 நிமிடங்கள் உரையாற்றினார். கடந்த சுற்றுப்பயணங்களை ஒப்பிடும் போது, இது கொஞ்சம் நீண்ட உரையாக பார்க்கப்படுகிறது.

விஜய் பேசுகையில், திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். கல்வி, ரேஷன், மருத்துவம், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று திமுகவை கடுமையாக சாடி இருந்தார்.
விஜய்யிடம் புதிதாக எந்த விஷயமும் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டதற்கு பின், புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பதிலாக மாற்றுத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது.
அதனை அப்படியே திமுக மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் அறிவித்தது. இதன்பின் திமுக ஆட்சி அமைந்த பின் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என்று புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதுபோன்ற சமூக நலத் திட்டங்களை தான் விஜய்யிடம் இருந்து பொதுமக்களும், விமர்சிப்பவர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவில் கொள்கையே இல்லாமல் நிர்வாகத்தில் ஊழல் இருக்காது என்ற கொள்கையை வைத்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி ஆம் ஆத்மி மட்டும்தான். டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் ஆட்சியில் நிர்வாகமே கவனமாக உள்ளது. கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மட்டுமே ஆம் ஆத்மி கட்சி கொள்கையாக அறிவித்தது.
இதனால் தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு ஆம் ஆத்மி கட்சியாக உருவாகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அரசியலுக்கு வருபவர்கள் தமிழக மக்களுக்கு தன்னுடைய சிந்தனையில் இருந்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைப்பார்கள். விஜயகாந்த், சீமான் என்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பலரும் தங்களின் சிந்தனைகளையும், திட்டங்களையும் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் விஜய் அடிப்படை வசதிகளை சரியாக செய்வோம் என்று தொடர்ச்சியாக கூறுவது அவரிடம் புதிய சிந்தனையோ, திட்டங்களோ இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறைக்குள் கொள்கை உள்ளது. கல்விக்கு என்று பிரத்யேகமாக ஒரு கொள்கை, தொழில் கொள்கை, சுற்றுச்சூழல் கொள்கை என்று அத்தனைக்கும் கொள்கையை வடிவமைத்துள்ளனர்.
மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் பிப்ரவரி மாதம் வரை நீட்டித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தவெகவின் பிரத்யேக திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அவ்வப்போது வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சிப்பதோடு, அவர்களுக்கு மாற்றாக தவெக வந்தால் என்ன செய்வோம் என்பதை கூறி வாக்கு கோர வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications