விசில் சின்னத்துடன் ஒரு புகைப்படம் கூட போடாத விஜய்.. சோகத்தில் தவெக தொண்டர்கள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. அந்த சின்னத்தை அறிமுகம் செய்யும் வகையில் விஜய் தனது கையில் விசிலுடன் இருக்கும் புகைப்படத்தை கூட வெளியிடாதது விவாதமாகி இருக்கிறது. இதனால் விஜய்யின் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் கரை சேராது என்ற வாதங்கள் மீண்டும் துளிர்க்க தொடங்கி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றன. ஆனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க விருப்பம் காட்டவில்லை.

அதேபோல் ஈரோடு பொதுக்கூட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின் தவெக கட்சியே சைலண்ட் மோடில் இருக்கிறது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தவெக அமைதியாக இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படத்தில் ரிலீஸ்-ம் தணிக்கை வாரியத்தால் தள்ளி போயிருக்கிறது.
இன்னொரு பக்கம் சிபிஐ விசாரணைக்கு இருமுறை விஜய் ஆஜராகி இருக்கிறார். இதனால் விஜய்யை பாஜக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவெக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. தவெக போட்டியிட உள்ள முதல் தேர்தலிலேயே பொதுச் சின்னம் ஒதுக்கி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்தனர். நேற்றைய நாள் முழுவதும் விசில் சின்னத்தை வைத்து சோசியல் மீடியாவில் அலப்பறை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து விசில் சின்னம் கிடைத்தது தொடர்பாக விஜய் ஒரு பதிவையும் எழுதி இருந்தார். அதில், நமது சின்னம் விசில்.. நல்லவர்கள் சின்னம் விசில்.. நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.. ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்..
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.. வெற்றிச் சின்னம் விசில்.. விசில் போடுவோம் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னத்தையே அப்படியே அந்தப் பதிவுடன் புகைப்படமாக வெளியிட்டிருந்தார். விசில் சின்னத்துடனோ, அதன் புகைப்படத்துடனோ விஜய் ஒரு புகைப்படத்தை கூட வெளியிடவில்லை.
இதனால் பலரும் விஜய்யின் அட்மின் மூலமாக அந்தப் பதிவு எழுதப்பட்டதாக விமர்சித்து வருகின்றனர். இதனால் விஜய்க்கு இன்னும் தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஆர்வம் வரவில்லை என்றும், வீட்டில் இருந்து கொண்டே அரசியலில் சாதிக்க முடியாது என்றும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications