ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக, தவெகவினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் முதல் நாள் பிரச்சாரத்திலேயே தவெகவினர் அத்துமீறல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றன.
பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய் மதியம் பெரம்பூரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசியவர், தாய் வீட்டில் இருந்து என்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளேன். அம்மாக்களின் ஆசியோடு பரப்புரையை தொடங்கியிருக்கிறேன். பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை. இது நாடா.. இல்லை காடா. மூதாட்டிகள், குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இது விசில் புரட்சி தேர்தல்.

தலைமுறைக்கான தேர்தல்
வெளியூர், வெளி நாடுகளில் உள்ள இளைஞர்கள் தேர்தல் வார நாளில் வருகிறதே என்று நினைக்க வேண்டாம். இப்போதே விமானம், ரயில், பேருந்து டிக்கெட்களை புக் செய்து கொள்ளுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். உங்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார்.
பிரச்சாரத்துக்கு முன்பாக மும்மத கோயில்களை குறிப்பிட்டு தொடங்கினார். விஜய் விசில் சின்னத்தை காண்பித்தும், கையில் விசில் அடித்தும் பிரச்சாரம் செய்தார். அவருக்கு தவெகவினர் வேல் பரிசாக வழங்கினார்கள். வாகனத்தில் நின்றபடியே அங்கிருந்த மக்களுடன் செல்பி எடுத்து கிளம்பினார். முன்னதாக விஜய் கடந்த மார்ச் 28 ஆம் தேதியே பெரம்பூரில் பிரச்சாரத்தைத் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
தவெகவினர் அட்ராசிட்டி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து விஜய்யின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக தவெகவினர் புகார் கூறுகிறார்கள். ஆனால் தவெக பொதுக்கூட்டங்களில் ஒருங்கிணைப்பு, நிர்வாகம், கட்டுப்பாடு போன்ற எதுவும் இல்லை. தவெகவினரும் கூட்டத்திற்கு வருவோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில்லை. முதல் நாள் பிரச்சாரத்திலும் அது எதிரொலித்தது.
பெரம்பூர் விஜய் பிரச்சாரத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். ஆனால் களத்தில் பெரிய ஏற்பாடுகளை காண முடியவில்லை. காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு கம்பிகளை கடந்து, தவெகவினர் முண்டியத்து கொண்டு ஓடினார்கள். இதில் தள்ளு முள்ளாகி சிலர் கீழே விழுந்தனர். காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டுதான் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
காவல்துறை, தேர்தல் அதிகாரிகளுக்கு களத்தில் தவெகவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். விபரீதம் ஆவதற்கு முன்பாக தவெகவினர் சுதாரித்துக் கொண்டால் சரிதான்.












Click it and Unblock the Notifications