இவர்கள் எல்லாம் தவெக மாநாட்டுக்கு வர வேண்டாம்.. முக்கிய வேண்டுகோள் வைத்த விஜய்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், தவெக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் தவெக தலைவர் விஜய். அந்தக் கடிதத்தில், கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர், சிறுமியர்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு நேரில் வரவேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்கள் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவதே தனது லட்சியம் என சூளுரைத்துள்ளார் விஜய். தவெகவை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சிக் கொடியை கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.

tamilaga vettri kazhagam tvk vijay

இந்த நிலையில்தான் வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கொள்கைகளை அறிவித்து முதல் உரையாற்ற உள்ளார். கட்சி மாநாட்டுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல என்றும், செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் எழுதியுள்ள கடிதம்: தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.

tamilaga vettri kazhagam tvk vijay

அரசியலை வெற்றி- தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

என் மனம் தவம் கிடக்கிறது: மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

முக்கிய வேண்டுகோள்: இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.

tamilaga vettri kazhagam tvk vijay

நேரில் வரவேண்டாம்: மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும்.

விவேக சாலையில் சந்திப்போம்: நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+