தமிழக அரசியலில் புதிய திருப்பம்?.. ஆட்சி அமைப்பதில் இழுபறி.. அதிரடி முடிவெடுக்கும் விஜய்?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களாகியும், புதிய அரசு அமைப்பதில் இன்னும் தெளிவான நிலை உருவாகவில்லை. பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்த்த தவெக தலைவர் விஜய்க்கு, கடைசி நேரத்தில் கூட்டணி அரசியல் பெரும் சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில் தவெக கணிசமான இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. ஆனால் தனிப்பெரும்பான்மை எட்டப்படாததால், சிறு கட்சிகளின் ஆதரவு அவசியமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பல கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சில கட்சிகள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கடும் மனஉளைச்சலில் உள்ளதாக கூறப்படும் விஜய், "ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருந்து பதவி பெற விருப்பமில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. மீண்டும் மக்களிடமே சென்று முழு ஆதரவை கேட்பேன்," என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், "ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதே சிந்தனையுள்ள கட்சிகள் ஆதரவு தருவார்கள் என நம்பினேன். ஆனால் சிலர் தற்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைக்கிறார்கள். ஆட்சி அமைப்பதற்கு முன்பே இவ்வளவு அழுத்தம் கொடுப்பவர்கள், ஆட்சிக்கு பிறகு என்ன செய்வார்கள் என்ற பயம் இருக்கிறது," என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்.
இதற்கிடையில், விஜய்க்கு நெருக்கமான ஆலோசகர்கள் பல்வேறு வழிகளை பரிசீலித்து வருகிறார்கள். "நமக்கு இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல கதவுகள் திறந்துள்ளன. பிற கட்சிகளிலும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தரலாம்," என ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், "ஒன்றே முக்கால் கோடி மக்களின் வாக்குகளை வீணாக்கக் கூடாது. நீங்கள் பின்வாங்கினால், அந்த இடத்தை நீங்கள் எதிர்க்கும் சக்திகள் நிரப்பிவிடும்," எனவும் விஜயிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், விஜய் அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி அமைப்பாரா? அல்லது மீண்டும் மக்களிடம் செல்வாரா? என்ற கேள்வியே தற்போது அரசியல் வட்டாரத்தின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications