கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தவெகவை நெருங்கி வந்த அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல் சொதப்பிய ஆதவ் அர்ஜுனாவை விஜய் திட்டி தீர்த்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்து 3 வருடங்களாகிவிட்டன. சினிமாவை போல அரசியலிலும் கொடி கட்ட பறக்க வேண்டும் என ஏராளமான திட்டங்களுடன் களமிறங்கினார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே விஜய், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு" என்று அறிவித்தார் விஜய். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. [TVK Vijay]

ஆதவ் அர்ஜுனாவுக்கு கூட்டணி பொறுப்பு
ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில், தவெகவுடன் இப்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணி சேரவில்லை. 23 திமுக கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணியை கட்டியுள்ளது. அதிமுக - பாஜகவும் தங்களால் முயன்ற முயற்சியை எடுத்து வருகிறார்கள். விஜய்யின் ஆட்சி அதிகாரம் பங்கை காங்கிரஸ் கட்சி மட்டுமே சீரியசாக எடுத்துக் கொண்டது.
விஜய் தவெகவுடன் இணைந்துவிடுவோம் என திமுகவுக்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து பேரம் பேசினார்கள். கடைசியில் அதுவும் கைக்கூடவில்லை. தவெகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளை இணைக்கும் அஸைன்மென்டை அந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண் மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைத்தார் விஜய். மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருப்போரை தவெக பக்கம் இழுக்கும் பொறுப்பும் ஆதவிடம் கொடுக்கப்பட்டது.
உச்சத்தில் உள்கட்சி பூசல்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தவிர, களத்தில் அனுபவம் பெற்ற யாரும் தவெக பக்கம் செல்லவில்லை. இந்த பொறுப்புகளில் கவனம் செலுத்துவதை விட தவெக உள்கட்சி பூசலில் தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி என ஆளுக்கு ஒரு தனி டிராக்கில் பயணித்தார்கள். இவர்கள் தங்களுக்குள் யார் கோலோச்சுவது என்ற சண்டையில் தான் இருந்தனர்.
இதுகுறித்து தவெகவினர் கூறுகையில், "அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த நவம்பர் வரை விஜய்யை நேரடியாக பாராட்டி சிக்னல் கொடுத்தார். பதிலுக்கு தவெகவும் எந்த ரியாக்ஷனும் இல்லை. செங்கோட்டையனின் முயற்சிகளையும் கண்டுகொள்ளவில்லை. தவெகவில் யாரும் பேசாததால் அதிருப்தியடைந்த தினகரன் கடுப்பாகி பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
கூட்டணியில் சொதப்பல்
எந்த முயற்சியும் எடுக்காமல் புத்தாண்டுக்குப் பிறகு தினகரன் தவெக கூட்டணியில் இணைவார் என ஆதவ் விஜய்யை நம்பவைத்துள்ளார். விஜய் "எங்க வீட்டுப் பிள்ளை" என ஆரம்பத்திலேயே கொக்கி போட்ட தேமுதிக பிரேமலதாவையும் தவெக முறையாக அணுகவில்லை. தேமுதிகவுடன் பேச அவர்கள் நாள் கிழமைக்காக காத்திருந்த நேரத்தில் திமுக வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களை கூட்டணியில் இழுத்துவிட்டது.
ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என திமுகவில் இணைந்த அதிமுக புள்ளிகளின்முதல் சாய்ஸ் தவெக தான். அடுத்தடுத்து செங்கோட்டையனுக்கு நடந்த அவமானத்தாலும், முறையாக அணுகாததாலும் அவர்கள் திமுகவில் இணைந்துவிட்டனர். ஆதவ் அர்ஜுனா தான் அமைச்சரே ஆகிவிட்டோம் என்கிற மனப்பான்மையில் கூட்டணிக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை.
கைவிட்ட காங்கிரஸ்
தவெகவின் கடைசி நம்பிக்கையாக காங்கிரஸ் மட்டுமே இருந்தது. பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து, காங்கிரஸ் தலைமையிடம் நேரடியாக பேசுங்கள் என்று கூறியுள்ளார். அந்தப் பொறுப்பையும் விஜய் மீண்டும் ஆதவிடம் ஒப்படைத்தார். திமுகவின் கறார் முடிவால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் தவெகவை அணுக முயற்சித்தார். ஆனால் தவெகவில் நடந்த அதிகார போட்டியில் அதுவும் நிறைவேறவில்லை.
செல்வப்பெருந்தகை போன்ற லோக்கல் நிர்வாகிகளை பார்க்காமல், நேரடியாக ராகுல் காந்தியை சந்திக்க முயற்சித்தார். ஆனால் ராகுல் காந்தியோ, ஆதவை நேரடியாகச் சந்திக்காமல் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமே டீல் செய்துள்ளார். கடைசியாக காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத் வந்த ராகுல் காந்தியை சந்திக்க ஆதவ் அர்ஜுனா பெரிதும் முயற்சித்தார்.
கடுப்பான விஜய்
ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 15 பேர், திமுக-வுடன் கூட்டணி தான் வைக்க வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டனர். இதனால் கடைசி வரை ஆதவை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் கையை விட்டு போனதால் விஜய் அப்செட்டாகியுள்ளார். தன்னுடைய 'வாய்ஸ் ஆஃப் காமன்' நிறுவனத்தின் தரவுகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அவர் விஜய்யை ஏமாற்றிவிட்டார்.
இதை விஜய்யும் மிகவும் தாமதாக உணர்ந்துள்ளார். 'கூட்டணிக்கு காத்திருந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி முடிக்கவில்லை. களத்தில் நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே' என ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண் சிவக்க கடிந்துள்ளார்" என்றனர். இந்த சம்பவம் தவெகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications