சென்னையில் கதறிய தவெக பெண்கள்.. விஜய் ரோடுஷோவில் அடுத்தடுத்து மயக்கம்.. கடும் நெரிசலால் தவிப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் ரோடுஷோவில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் விஜய்யை பார்க்க கூடியிருந்த இடத்தில் கூட்ட நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டதால் தொண்டர்கள் ஒருவரையொருவர் இடித்து கொண்டனர். அதுமட்டுமின்றி பல பெண்கள் மயங்கி விழுந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டசபை தொகுதியின் பஞ்செட்டியில் ரோடுஷோ நடத்தினார்.
சென்னையில் 3 தொகுதிகளில் ரோடுஷோ
அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் சென்னையில் ரோடுஷோவை தொடங்கினார். அதன்படி வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் ரோடுஷோ மேற்கொண்டு வருகிறார். கிராமப்புறங்களை விட சென்னையில் அதிக ஆதரவு உள்ளதாக தவெகவினர் கூறி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3 தொகுதிகளில் ரோடுஷோ சென்று வருகிறார்.
பெண்கள் மயக்கம்
இதில் சென்னை வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜய் ரோடுஷோ மேற்கொண்டார். அப்போது விஜய்யை பார்க்க ஏராளமான இளம்பெண்கள், இளைஞர்கள் குவிந்தனர். நீண்டநேரம் அவர்கள் வெயிலில் காத்திருந்தனர். இதனால் சில பெண்கள் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த தொண்டர்கள், உடன் வந்தவர்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து கூட்டத்தில் இருந்து வெளியே தூக்கி சென்றனர். போலீசாரும் உதவிகள் செய்தனர்.
கூட்ட நெரிசல் போன்ற சூழல்
இதுதவிர பல இடங்களில் விஜய்யை பார்க்க ஏராளமானவர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சாலையின் இருபுறமும் நிற்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் முண்டியடித்து கொண்டதால் நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டது. அதில் சிக்கி பெண்கள் பரிதவிக்கும் காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தவெக தலைமையை மீறிய..
முன்னதாக இந்த பிரசாரத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு தவெகவினர் செவிசாய்க்கவில்லை. மாறாக விஜய்யின் ரோடு தொடங்குவதற்கு முன்கூட்டியே சென்று இளம்பெண்கள், இளைஞர்கள் வெயிலில் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications