Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு ஒரே நாளில் வெளியிட்ட இரண்டு சூப்பர் அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மகள், மகன் திருமணத்துக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

Two super announcements issued by the Tamil Nadu government for the differently-abled

மூளை முடக்குவாதம்

மேலும், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை பெறும் வகையில் ரூ.131.25 கோடியில் தன்னிறைவு அடையும் திட்டம் செயல்படுத்தப்படும். தசைச்சிதைவு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பால் கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியாகவும், 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால்(பேட்டரி) இயங்கும் உபகரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட நடக்க இயலாத 18 வயதுக்கு மேற்பட்ட 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.30 கோடி மதிப்பில் இந்த உபகரணம் வழங்கப்படும்.

சக்கர நாற்காலி

தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பல்வகை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முன்னதாக தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்ட திருத்த மசோதாக்களை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு, திறந்த மனதோடு செயல்பட்டு வருகிற அரசு இது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என்று குரலற்றவர்களின் குரலாக ஆட்சி இருக்க வேண்டுமென்றுதான் செயல்பட்டு வருகிறோம்.

மாதாந்திர உதவித்தொகை

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது. இப்போது இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடியாக 2 மடங்கு உயர்த்தி இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல, உரிமை அடிப்படையில் திட்டங்களைத் தீட்டி வழங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான்.

அரசு பணியாளர்கள்

அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு அரசு வழங்கும் என்று அறிவித்திருக்கிறோம்.

மெரினா கடற்கரையில் வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீனக் கருவிகள் வழங்கும் திட்டம் ரூ.125 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறோம். மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்க சிறப்பு மரப்பாதையை அவர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.

வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி 27-ந் தேதி கொளத்தூரில் நடைபெற்ற தந்தை பெரியார் அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டேன். அடுத்த நாளே என் வீட்டிற்கு வந்த பேராசிரியர் தீபக்நாதன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் எனக்கு நன்றியையும், பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.

4 ஆண்டு கால சாதனை

இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்கள் வாழும் ஊரிலேயே மரியாதை கிடைக்கும். என்னைச் சந்தித்தபோது தீபக், இந்த 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளிலேயே இதுதான் டாப் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். அவர்களுக்கான இந்தச் சிறப்புமிகு சட்டத்தை முன்மொழியும் இந்த வேளையில், பார்வையாளர் மாடத்திலிருந்து அவர் இதை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அவர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருக்கிறார்.

சட்ட மசோதா

உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுடைய உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டமசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இப்போது அந்தச் சட்டமசோதாக்களை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

உறுப்பினர்கள் நியமனம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக 2 சட்டமசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாக பெறுவதற்கு இந்த மசோதாக்கள் வழிவகுக்கும்.

உள்ளாட்சி அமைப்புகள்

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம்-1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இந்த அவைக்கு வழங்குகிறேன். இந்த மசோதாக்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுடைய குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.


மாற்றுத்திறனாளிகள் நியமனம்

ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பொருந்தியவர்களாக உயர்த்துவதும் இந்தச் சட்டத்திற்கான மசோதாக்களை அறிமுகம் செய்கிறேன். இந்தச் சட்டத் திருத்தத்தினால் விளையப்போகும் பலன் பற்றி ஒரு விவரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 மாற்றுத்திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எதிரொலிக்கும். இது இந்தச் சட்டத்தினால் விளையப்போகும் மிகப்பெரிய நன்மையாகும்"இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+