"மண்டை மேல கொண்டை".. இதென்ன புதுசா கிளம்பியிருக்கு.. சனாதன தர்மத்துக்கு திமுக ஆதரவா? கிளம்பிய டவுட்
சென்னை: சனாதன தர்மத்துக்கு திமுக அரசு ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும், இதுகுறித்து பாடநூலில் இடம்பெற்றுவிட்டதாகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்தபடியே வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"சனாதனம் குறித்து பேசி திமுக மீதுள்ள அதிருப்தியை திசைத்திருப்ப முயலும் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் சமதர்மம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்" என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார்.

சனாதனம்: "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான்... பாஜகவினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்." என்று உதயநிதி பதிலடி கூறியிருந்தார்.
அத்துடன், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 பேருமே விளக்க அறிக்கை தந்திருந்தனர்.. அந்தவகையில், தமிழ்நாடு அமைச்சர்கள் உட்பட திமுக கூட்டணியில் அனைவருமே சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டங்கள்: எனினும், பாஜக இந்த பிரச்சனையை விடுவதுபோல இல்லை.. உதயநிதி மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.. மும்பையில் உதயநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழகம் தாண்டி, இந்த விவகாரம் தேசிய அளவிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தபடியே உள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக மீண்டும் திமுகவை சாடி, இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. இதற்கு காரணம், தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
பிளஸ் டூ பாடம்: அதாவது, தமிழ்நாடு அரசின், பிளஸ் டூ பாட புத்தகத்தில், 58ம் பக்கத்தில் சனாதனம் குறித்து அச்சிடப்பட்டுள்ளது.. அதில், "இந்து அல்லது 'ஹிந்து' என்ற சொல்லை ஹிம்+து எனப்பிரிக்கலாம். ஹிம் - ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. "சனாதன தருமம்" என்றால் "அழிவில்லாத நிலையான அறம்" எனப்படும்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன
வர்ணாசிரமம்: அதேபோல, 59 ஆவது பக்கத்தில், "இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், "இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் என குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரிகளைதான் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டும் வருகிறது.. "திராவிடம் இதைத்தான் கற்பிக்கிறதா? இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம்.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் திமுக பேசுவதா? 'சனாதனம் ஓர் அறம். வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு இல்லை' என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஸ்கிரீன் ஷாட்: ஆனால், இந்த புத்தகம் கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது.. 2019ல் வெளியானது முதல் பதிவு என்றாலும், அதனைத் தொடர்ந்து வெளியானது 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகள் ஆகும்.. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகியிருந்தாலும், கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தமிழக அரசு இதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
"சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் இப்படி பேசினால், உங்கள் நாக்கை நாங்கள் பிடுங்கி விடுவோம்... எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களையும் பிடுங்குவோம்.. சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று பாஜக எம்பிக்கள் முதல் ஆவேசமாகி வருகிறார்கள்.
ஆவேசம்: "சனாதனம் பற்றி நான் எங்கே பேசினேன்.. சனாதனம் ஒழிப்பு பற்றிதானே பேசினேன்.. அதுக்கப்புறம் நீங்க எல்லாரும்தானே அதை பற்றி பேசிட்டு இருக்கீங்க" என்று உதயநிதி ஆவேசமாகி வரும் நிலையில், இந்த பாடப்புத்தகத்திலுள்ள விளக்கம் அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications