விண்ணப்பித்த பெண்களுக்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும்.. உதயநிதி ஸ்டாலின் குட் நியூஸ்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள இந்த அப்டேட் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாகவும் பேசி இருக்கிறார்.

மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும்
இந்த விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினால் 200 அல்ல, 200 பிளஸ் தொகுதிகளில் வெற்றிதான். மற்ற மாநிலங்களை விட, அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடாமல், படித்த பட்டத்தை போடுவது தான் பெருமை.
அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டது. அதிமுக தொண்டர்கள் சசிகலா அணியா? சசிகலா டிரைவர் அணியா? செங்கோட்டையன் அணியா? எந்த அணி என தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர். திமுக தொண்டர்கள் கொள்கை பற்றியும் திட்டங்கள் பற்றியும் பேசிக் கொள்வார்கள்" எனப் பேசியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1.15 கோடி பெண்கள் ரூ.1000 பெற்று வருகின்றனர். இந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை அடுத்தடுத்து செயல்படுத்த தொடங்கினாலும், தமிழ்நாடு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திறம்படச் செயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது. இப்போது இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்காக பொதுமக்களிடம் இருந்து தமிழக அரசு புதிய விண்ணப்பங்களை பெற்றுள்ளது.
மீண்டும் வாய்ப்பு
தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க கடந்த முறை விடுபட்டிருந்தாலும், ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருந்திருந்தாலும் அவரவர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று உரிய ஆவணங்களை சமர்பித்து இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டது.
இதனைத்தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமின் முதல் கட்டத்தில் இதுவரை சுமார் 17 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவலை உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக ஆய்வு நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தெரிவித்தார்.
பெரும் எதிர்பார்ப்பு
45 நாட்களுக்குள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருப்பதால், தங்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பதை தெரிய பொதுமக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்பதால் பெண்களை மகிழ்விக்கும் குட் நியூஸ் இந்த தேதியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் உள்ளது.












Click it and Unblock the Notifications