Udhayanidhi: 2 நாட்களில் 9 கொலைகள்! முதல்வரே! முதல்ல மிக்சர் சாப்பிடுவதை நிறுத்துங்கள்! உதயநிதி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 9 கொலைகள் நடந்துள்ள நிலையில் இனியும் முதல்வர் விஜய் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?

திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஸ்ஹவுஸ் சம்பவம்
சென்னை ஐஸ்ஹவுஸ் அனுமந்தபுரம் பகுதியில் தாயுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளைஞர், ஒருவர் இரண்டு பேரால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் 28 வயதான அஜித் என்பதும் முன்விரோதம் காரணமாக அவரை தாயின் கண் முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கொலையை ஹரீஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவர் செய்திருக்கலாம் என சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு அஜித் மற்றும் ஹரீஷ் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.
இதில் ஹரீஷ் ஏ பிரிவு குற்றவாளி ஆவார். தலைமறைவாக இருந்த இவர்களை தேடி வந்த ஐஸ்ஹவுஸ் போலீஸார், ஹரீஷை கைது செய்துள்ளனர். தப்பியோடிய ராகேஷை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தில் முன்விரோதம் மட்டுமில்லாமல் கஞ்சா விற்பனையும் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் காவலர், அருகில் சண்டையிட்ட இளைஞர்களை தடுத்த பொழுது, அவர்கள் தள்ளிவிட்டதில் அந்த பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது போல் கடந்த இரு நாட்களில் மொத்தம் 9 கொலைகள் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவ்வபோது விமர்சனம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
