அப்படியா..! நல்லாருக்கு நல்லாருக்கு.. எடப்பாடி பற்றிய கேள்விக்கு உதயநிதியின் 'அல்டிமேட்' ரியாக்ஷன்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி கருத்து பற்றிய கேள்விக்கு, "அப்படியா.. நல்லாருக்கு நல்லாருக்கு.." என கிண்டலாக பதில் அளித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு கலந்துரையாடினார் உதயநிதி.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடல்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினர்.

மாற்றுத்திறனாளிகளுடன் உதயநிதி
கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பின்னர் மாற்றுத் திறனாளி சிறுவர்களை, இளைஞர்கள் சிலர் பைக்கில் கூட்டிச் சென்று அவர்களை மகிழ்வித்தனர். அதனை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிக்கு உகந்த வகையில்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இங்குள்ள மாற்றுத்திறனாளிகளிடம் உரையாடிய போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்தவையாக இருக்கும் வகையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கொண்ட வகையில் இருக்க நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்." என்றார்.

அனைத்து கடற்கரைகளிலும் மரப்பாதை
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், பேருந்துகளை மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நானும் சட்டசபையில் பேசியுள்ளேன். சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை அமைத்தாது போல மற்ற கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைப்பது பற்றி முதல்வரிடம் கோரிக்கை வைத்து விரைவில் செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

நல்லாருக்கு.. நல்லாருக்கு
அப்போது, 'திராவிட மாடல்' என்பதே அதிமுக உருவாக்கியது தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்வியை முடிப்பதற்குள், கிண்டலான ரியாக்ஷனோடு, 'அப்படியா' எனக் கேட்டு விட்டு நகர்ந்தார் உதயநிதி, அவரது கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என மீண்டும் செய்தியாளர் கேட்டதும், "நல்லாருக்கு.. நல்லாருக்கு" என சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.












Click it and Unblock the Notifications