Mylapore: அக்கா தமிழிசையை ஆளுநராக்குவோம்! இது சட்டசபை தேர்தல்தானே! உதயநிதி ஏன் இப்படி சொல்கிறார்?
சென்னை: அக்கா தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநர் பதவியை வாங்கித் தருவோம் என மயிலாப்பூரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அக்கா தமிழிசைக்கு அந்த பதவிதான் சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் திமுக வேட்பாளர் வேலு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளர் பாலுவை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடியாரை பத்து தோல்வி பழனிசாமி என கூறுவது போல இந்த தொகுதியில் பாஜகவின் வேட்பாளரை 6 தோல்வி தமிழிசை என கூறலாம்.
தென் மாவட்டங்களில் இருந்து வடமாவட்டம் வரை தேர்தலில் நின்ற இடங்களில் எல்லாம் தோல்வியைத்தான் பெற்றிருக்கிறார். என்றைக்குமே மக்கள் தமிழிசை அக்காவை ஏற்றுக் கொள்வதில்லை.
அவருக்கு ஆளுநர் பதவிதான் சரியாக இருக்கும். தமிழிசையை மீண்டும் நாம் ஆளுநராக்குவோம். அந்த வேலையை நாம் அனைவரும் இணைந்தே செய்வோம். முதல்வர் ஸ்டாலின் அவருடைய கொள்கை தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் திருவாரூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
நான் அறிஞர் அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் இருந்து தொடங்கியிருக்கிறார். ஏனென்றால் அவரது தலைமை அலுவலகம் டெல்லி அணி. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தோல்வியை மயிலாப்பூரில் இருந்து தொடங்குவோம். திமுகவின் வெற்றிக்கு அனைவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் தமிழக பாஜகவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இவர் 2006, 2011 சட்டசபைத் தேர்தலிலும், 2009, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு ஆளுநர் பதவிகளுக்கு சென்ற தமிழிசை, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2024 மக்களவைத் தேர்தலில் சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த முறை வேட்பாளராக தமிழிசை அறிவிக்கப்படுவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமியுடன் மயிலாப்பூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். அப்போது "நீங்கள்தான் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரா" என செய்தியாளர்கள் கேட்ட போது, அதை கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
