போன வருஷம் மாதிரி இல்ல.. கோலாகல ஏற்பாடுகளுடன் திமுகவினர்! அன்பகத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் உதயநிதி
சென்னை : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை திமுக இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தில், நிர்வாகிகளைச் சந்திக்க இருக்கிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் நாளை (நவம்பர் 27ஆம் தேதி)கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழை பாதிப்பால் மக்கள் அவதியுற்ற நிலையில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என கழக உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், இந்த முறை மிகப் பிரமாண்டமாக தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாட திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

உதயநிதி பிறந்தநாள்
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ள உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடத் திட்டமிட்டுள்ள திமுக உடன்பிறப்புகள், அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுவது பற்றி ஆலோசனை நடத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்றோருக்கு உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை இளைஞரணியினரும், திமுக நிர்வாகிகளும் வழங்குகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னோடிகளுக்கு கௌரவம்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கவும் திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். சிலம்பாட்டம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. திமுகவில் நீண்ட காலமாக செயலாற்றி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ டிரைவர்களுக்கு விபத்து காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட உள்ளன.

ஒரு வாரம்
நாளை மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக ஒரு வாரம், 10 நாட்கள் வரை உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு திமுக மாவட்ட செயலாளர்களும், இளைஞர் அணி நிர்வாகிகளும் முடிவு செய்துள்ளனர். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி பிறந்த நாளையொட்டி, போஸ்டர்கள், பேனர்களையும் கட்சி நிர்வாகிகள் வைத்துள்ளனர். உதயநிதி உச்சி குளிர வாழ்த்துவதில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பெரும் போட்டியே நடந்து வருகிறது.

வாழ்த்து
தனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வரும் தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெறும் உதயநிதி ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். அப்போது ஏராளமான தொண்டர்களையும் சந்திக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நிர்வாகிகளை சந்திக்கிறார்
பின்னர் திமுக இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நாளை நிர்வாகிகளை சந்திக்கிறார் உதயநிதி. அப்போது தி.மு.க முன்னணி நிர்வாகிகளும், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என உதயநிதி அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்தாண்டு மெகா திட்டங்களோடு களமிறங்கியுள்ளனர் திமுக உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications