ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆக 3 நாட்கள் ஆகும்.. உடல்நிலை பற்றி உதயநிதி ஸ்டாலின் அப்டேட்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்பப்லோவுக்கு மாற்றப்பட்டு, அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று தமிழக அரசு அறிவித்த நல திட்டங்களை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள், மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மருத்துவமனையில் ஸ்டாலின்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வரும் மகனுமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதேபோல் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கூடினர்.
உடல்நிலை எப்படி?
முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் ஜூலை 21 ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவ குழுவினர்கள் தலை சுற்றல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனாம்பேட்டை அப்போலோவில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காரில் அழைத்துச் செல்லப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பினார்.
உதயநிதி பேட்டி
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்வதேச - தேசிய - மாநில அளவிலான போட்டிகளில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். இன்று காலையில் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை அளிப்பார்கள். முதல்வர் நலமுடன் இருக்கிறார். 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications