திமுக துணை பொதுச் செயலாளர் பதவி! ஸ்டாலின் மீது உதயநிதி அதிருப்தியாம்! கொளுத்தும் ஆர்.பி.உதயகுமார்
சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்ப சண்டையை மறைக்கவே தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மதுரை திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மற்றொரு துணை பொதுச் செயலாளராக உதயநிதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மீது உதயநிதி அதிருப்தியில் இருக்கிறார் என செய்திகள் வந்தன. இந்த குடும்ப சண்டையை மறைக்கவே முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை குறித்து பேசி வருகிறார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு
2027 ஆம் ஆண்டு மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் மீண்டும் கூறியிருப்பதாவது: மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல.
எச்சரிக்கை
நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பா.ஜ.க அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.
மக்கள் தொகை கட்டுப்பாடு
அதேவேளையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும், பா.ஜ.க எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
விழிப்புடன் இருத்தல் நலம்
நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது. 1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும்.
பாஜக நிர்ணயம்
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது.
தெளிவற்ற மழுப்பல்
ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே. பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும்.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது.
சத்தியவான்கள்
இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அ.தி.மு.க போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க முன் மண்டியிட்டாலும், தி.மு.கவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்.
மாநில வளர்ச்சி
நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
யார் அந்த ஐவர்?
மதுரையில் கடந்த வாரம் திமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு ஏற்கெனவே ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் சிவா, கனிமொழி ஆகியோர் உள்ளனர்.
உதயநிதிக்கு பதவி
இந்த நிலையில் கூடுதலாக இருவர் திமுக துணை பொதுச் செயலாளராக மதுரை பொதுக் குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அன்றைய தினம் திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி என இரு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உதயநிதிக்கு புதிய பதவி குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் உதயநிதி, திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications