உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்
சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதி சொத்து விவரம் குறித்துவேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. அதேபோல் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடும் தவெக தலைவர் நடிகர் விஜய், வேட்பு மனுவில் தனது மனைவி, மகன், மகள், பெற்றோருக்கு கொடுத்த கடனை குறிப்பிட்டிருந்தார். இரண்டுமே பொதுவெளியில் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் சட்டப்பூர்வமான விளக்கங்களை அளித்துள்ளார். அதனை சற்று விரிவாக பார்ப்போம்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், "வேட்பாளர்களின் தேர்தல் உறுதிமொழிப் பத்திரங்கள் குறித்து மீண்டும் கொந்தளிப்பவர்கள் அனைவருக்கும்: அவர்கள் தங்களது துணைவர் மற்றும் தங்களைச் சார்ந்திருப்பவர்களின் (18 வயதிற்குட்பட்டவர்கள்) சொத்துக்களை மட்டுமே அறிவிக்க வேண்டும். எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட மகன்கள் மற்றும் மகள்களின் சொத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் கூற்றுப்படி 18 வயது நிரம்பிய மகனின் சொத்தை ஏன் காட்டத் தேவையில்லை என்பதை விரிவாக பார்ப்போம்., "தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவில், அதாவது Form 26 இல் கீழ்க்கண்டவர்களின் சொத்து விவரங்களை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்:
வேட்பாளர்
மனைவி/கணவர்
சார்ந்திருப்பவர்கள் : இங்குதான் முக்கியமான சட்ட நுணுக்கம் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அல்லது 18 வயதிற்கு மேலிருந்தும் வருமானம் இன்றி வேட்பாளரைச் சார்ந்து வாழும் பிள்ளைகளை மட்டுமே "Dependents" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் என்று சார்ந்திருப்பவர்கள் வருவார்கள் என சட்டம் வரையறுக்கிறது.
உதயநிதி மகன்
உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு விவகாரத்தை பொறுத்தவரை அவரது மகன் இன்பநிதிக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது. அவர் சட்டப்படி ஒரு மேஜர். அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்களாகக் கருதப்படும். அவர் தந்தையைச் சார்ந்து வாழ்பவர் இல்லை (சட்ட ரீதியாக) என்பதால், அவரது சொத்துக்களை உதயநிதி தனது வேட்புமனுவில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இது சட்டப்படி செல்லும்.
அடுத்ததாக கார்த்திக் சிதம்பரம், விஜய் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்குக் கடன் கடன் கொடுத்தது குறித்து கூறுகையில், "வேட்பாளர்களின் தேர்தல் உறுதிமொழிப் பத்திரங்களைக் கண்டு கொந்தளிப்பவர்கள் அனைவரும் தயவுசெய்து அமைதி காக்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்கள் உட்பட அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அவை வருமான வரித் தாக்கலின் ஒரு பகுதியாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் பொதுவாகக் கடன்கள்/முன்பணங்களாகவே கருதப்படுகின்றன, இல்லையெனில் அவை வருமானமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்." என்று கூறியுள்ளார்.
விஜய் மகன்
கார்த்திக் சிதம்பரம் கூற்றுப்படி குடும்ப உறுப்பினர்களுக்குக் கடன் கொடுத்தால் ஏன் வருமான வரி வராது என்பதை விரிவாக பார்ப்போம். விஜய் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்குக் கடன் அல்லது முன்பணம் கொடுத்திருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். வருமான வரி சட்டப்படி, ஒருவருக்குக் பணம் கொடுக்கும்போது அதை "வருமானம்" என்று காட்டினால் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் "கடன்" என்று காட்டினால் அதற்கு வரி விதிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது திருப்பித் தரப்பட வேண்டிய ஒரு பொறுப்பு.
கார்த்தி சிதம்பரம் சொல்வது போல, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடக்கும் பெரிய பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கு மூலமே நடக்க வேண்டும். அவை வருமான வரித் தாக்கல் மற்றும் கணக்குப் புத்தகங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏன் வரி விதிக்கப்படும்? ஒருவேளை இந்தக் கடனை "கடன்" என்று காட்டாமல், முறையான ஆதாரமின்றி ஒருவர் கணக்கில் பணம் இருந்தால், வருமான வரித்துறை அதை விளக்கப்படாத பணம் என்று கூறி, இதனை வருமான வரித்துறையினர் "Unexplained Money" அல்லது "Deemed Income" என்று கருதுவார்கள். அதற்கு மிக அதிகப்படியாக 60 சதவீதம் வரை வரி மற்றும் அபராதம் வருமான வரித்துறை விதிக்கும். எனவேதான், வரியிலிருந்து தப்பிக்கவும் சட்டப்பூர்வமாகப் பணத்தை மாற்றவும் இது 'கடனாகப்' பதிவு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications