Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக போட்டியிட்ட 1957 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் 'உதயசூரியன்' சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், வேறு சின்னத்தில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. முதன்முறையாக 1957இல் சட்டமன்றத்திற்கு நுழைந்தது திமுக.

'சட்டசபையில் 'உதயசூரியன்' என முதற்பக்கம் செய்தி போட்டு மகிழ்ச்சியை 'முரசொலி' (03.05.57) மூலம் வெளிப்படுத்தினார் மு.கருணாநிதி. சட்டசபையில் முதல்வர் காமராஜ் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிர்வரிசையில் நின்று அண்ணாதுரை தன் உரை நிகழ்த்தும் புகைப்படம் அதில் பதிவாகியிருந்தது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமே (28.04.57) மு.க. வீட்டில்தான் நடைபெற்றது. அந்தளவுக்குக் கட்சிக்குள் மு.கவுக்கு செல்வாக்கு இருந்தது.

Udhayasuriyan for Karunanidhi Rooster symbol for Nedunchezhiyan DMK faces first election

குழந்தைகள் கட்சி திமுக

மு.க. அவரது பத்திரிகையில், "கோடை வெப்பம் தகிக்கும் 'கோட்டை'க்குள் 'குற்றால அருவி' எனத் தன் தலைவரின் கன்னிப்பேச்சை வர்ணித்திருந்தார். "குழந்தைகள் கட்சி என்றார்கள். அடுக்கு மொழியில் பேசத்தானே தெரியும்? என்றார்கள். அண்ணா சட்டசபைக்குச் செல்வார்; அவர் கலகக்காரர்; ஆகையால் அதிக நேரம் பேசுவார்; சபாநாயகர் தடுப்பார்; உடனே முன்னேற்பாடாகப் பார்வையாளராய் வந்திருக்கும் 'கண்ணீர்த் துளிகள்' சம்பந்தமே இல்லாமல் கூக்குரல் போடுவார்கள், சட்டசபையில் குழப்பம் குடியேறும்; கெளரவம் குலையும்" என ஆளும் கட்சி ஆதரவு பத்திரிகை எழுதியது.

அண்ணாதுரை சபையில் கண்ணியமாக உரையாற்றினார். திமுக எதிர்ப்பாளர்களின் கணிப்புப் பொய்த்தது.'சுயேச்சை சின்னமான 'உதயசூரிய'னில் போட்டியிட்டு வென்றது. அந்தச் சின்னத்தை திமுக கோரிய போது அது தேர்தல் ஆணையத்தில் பொதுச் சின்னமாக இருந்தது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் விதியின்படி சுயேச்சை சின்னத்தில் களம் கண்ட கட்சி திமுக என்று ஆவணங்களில் பதிவானது.

திமுக உறுப்பினர்கள் அனைவரும் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டிப்போட அக்கட்சியின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியனோ சேவல் சின்னத்தில் நின்றார். அவர் போட்டியிட்ட தொகுதியில் உள்ளூர் வியாபாரிக்கு உதயசூரியன் ஒதுக்கப்பட்டது. ஆக, சூரியன் அந்தத் தொகுதியில் நெடுஞ்செழியன் கைக்குக் கிட்டாமல் தட்டிப்போனது.
ஜனநாயக திருவிழாவாகக் கருதப்படும் தேர்தலில் களம் காண்பதா? கூடாதா? என்பதில் திமுகவுக்குள் குழப்பம் இருந்தது. எனவே அக்கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை திருச்சியில் திமுகவின் இரண்டாவது மாநாட்டைக் கூட்டினார்.

அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேர்தலில் நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து 56,942 திமுகவினர் வாக்களித்தனர். கூடாது எனக் கூறி 4.203 பேர் வாக்களித்தனர். தேர்தல் பாதைக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு அமோக ஆதரவு உள்ளத்தை அண்ணாதுரை உணர்ந்தார்.

ஆகவே, 1957 தேர்தலில் திமுக களமிறங்கியது. மொத்தம் 124 வேட்பாளர்களை இறக்கியது கட்சி. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்திய போது, தேர்தல் பாதையே வேண்டாம் எனச் சொன்னவர் ஈ.வெ.கி.சம்பத். அடுத்தவர் கண்ணதாசன். தேர்தலில் நின்றபோது சம்பத் நாடாளுமன்றத்திற்குச் சீட்டு வாங்கி நின்றார். கண்ணதாசன் சட்டைக்குப் போட்டியிட்டார். அவரால் தோற்றுப் போனார்.

கண்ணதாசன் தோல்வி.. மு.க.வெற்றி

கண்ணதாசனைக் கழக அரசியல் பக்கம் திரும்பியவர் மு.கருணாநிதி. மேடையில் பேசும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தவரும் அவரே. பெரியாருடன் இருந்த காலம் தொட்டு சம்பத் செல்வாக்கு இருந்தது. திராவிடர் கழகம் பெரியாருக்குப் பின்னால் தனக்குக் கிடைக்கும் என சம்பத் நம்பினார். அது மணியம்மை கைக்குச் சென்றதால், வெறுத்துப் போய் வெளியேறியவர்களில் சம்பத்தும் ஒருவர்.

திமுக போட்டியிட்ட முதல் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதிதான் மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அவர் தஞ்சை மாவட்டத்துக்காரர். திருக்குவளையில் பிறந்த அவர், திருவாரூரில் செல்வாக்குப் பெற்றிருந்தார். அவருக்கு திடீரென்று குளித்தலை தொகுதி ஒதுக்கப்பட்டது. அதைக் கருணாநிதி எதிர்பார்க்கவே இல்லை. உடனே நெடுஞ்செழியன் மற்றும் நடராசனைச் சந்தித்து நியாயம் கேட்டார். ஒரே இரவில் அண்ணா மனம் மாற்றம் பெற்று இந்தக் காரியத்தைச் செய்தார் எனச் சொல்லப்பட்டது. அதன் பின்புலமாக சம்பத் கைவரிசை காட்டிவிட்டார் எனக் கழக உடன்பிறப்புகள் முணுமுணுத்தனர்.

பியட் காரில் கருணாநிதி பிரச்சாரம்

பிரச்சார வியூகங்களை வகுப்பதில் கெட்டிக்காரர் மு.க. எனவே தொகுதி மாற்றத்தை ஏற்றுக்கொண்டு குளித்தலைக்குச் சென்றார். அங்கே இளமுருகு - பொற்செல்வி வீடு அவரின் தேர்தல் பணி களமானது.

தனது தொகுதி சின்ன கிராமம் என்பதை அறிந்த கருணாநிதி, தொகுதியை நான்காக கூறுப்போட்டு பிரச்சனைகளை ஆராய்ந்தார். எந்தப் பகுதிக்கு என்ன தேவை என உணர்ந்தார். அதற்கு ஏற்ப பிரச்சார யூகத்தை அமைந்தார். மு.கவிடம் பியட் கார் இருந்தது. கட்சி துண்டறிக்கைகளை தன் 'முரசொலி' அலுவலகத்தில் அச்சடித்தார். அண்ணாதுரையின் உரையை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து தன் தொகுதிகளில் பல இடங்களில் ஒலிக்கவிட்டார் கருணாநிதி. தன் கரகரப்பான பேச்சையும் ஊரெங்கும் ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்டார்.

தன் தொகுதியை மட்டுமே பார்த்தால் போதும் என அவர் நினைக்கவில்லை. அண்ணாவின் தொகுதிக்குப் போய் பிரச்சாரம் செய்தார். வரவேண்டாம் என அன்பழகனும் நெடுஞ்செழியனும் அறிவுரை அளித்தனர். ஆனால், மு.க.வின் மனம் சம்மதிக்கவில்லை. தலைவரின் வெற்றியிலும் தன் பங்கு இருக்கவேண்டும் என நினைத்தார்.

குளித்தலையில் 46,163 வாக்குகள் பதிவாகின. அதில் 4 மட்டுமே செல்லாத ஓட்டுக்கள். மாநிலத்திலேயே செல்லாத ஓட்டுகள் குறைவாகப் பதிவான தொகுதி அன்றைக்கு குளித்தலைதான். கருணாநிதியைச் சட்டசபைக்கு அனுப்ப வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 22,785. இவரை எதிர்த்து களம் கண்ட கே.தர்மலிங்கம் 14,489 வாக்குகள் பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கிய எஸ்.ஷண்முகம் கட்டுத் தொகையை இழந்தார். தண்ணீர்பள்ளி கிராமத்தில் உள்ள அனைத்து வாக்குகளும் உதயசூரியனுக்கு விழுந்தன.

இந்தத் தேர்தலில் திமுக 15 தொகுதிகளில் வென்றது. அதில், மூன்று முக்கிய தலைவர்களான அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி ஆக்கியோர் கோட்டைக்குள் புகுந்தனர். சம்பத் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலையிலிருந்து ஆர்.தர்மலிங்கம் எம்.பி ஆனார். 1947இல் திமுக தொடங்கப்பட்டது முதல் திருவண்ணாமலை பகுதியில் செல்வாக்குப் பெற்று விளங்கியது. அந்தக் காலத்தில் இந்தக் கட்சியிலிருந்த உறுப்பினர்களில் ஒருவர்கூட பட்டதாரிகள் இல்லை. பாட்டாளிகளாக இருந்தனர்.

- எழுதியவர் கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+