சகதியால் தடுமாறி விழப்போன பாதுகாவலர்.. பார்த்ததும் சுதாரித்த உதயநிதி.. அடுத்து செய்ததை பாருங்க
சென்னை: சென்னையை போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை நீர் சூழ்ந்த இடங்களை ஆய்வு செய்தார். அப்போது உதயநிதிக்கு பாதுகாப்பு வழங்க சகதியில் வேகமாக சென்ற பாதுகாவலர் திடீரென்று கால்தவறி கீழே விழ போனார். இதை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு கைக்கொடுத்து தொடர்ந்து நடக்க உதவினார்.
சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்று இரவில் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு நேற்று காலையிலும் தொடர்ந்து மழை என்பது பெய்து கொண்டே இருந்தது. இதனால் சென்னை வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலை, மாதவரம், செங்குன்றம் உள்பட பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு முதல் மழை என்பது குறைந்தது. இன்று காலையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தாலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. சென்னையில் இந்த மழைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தான்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது நாளை கரையை கடக்க உள்ளது.
வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே நாளை காலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை வெள்ளத்தை சரியாக கையாள்வதற்கான ஏற்பாடுகளை அரசு, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூரில் மழை நீர் சூழ்ந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் இருந்தார். அந்த சமயத்தில் ஒரு இடத்தில் சேறும், சகதியும் நிறைந்து சிறிய மேடான பகுதி இருந்தது. அந்த பகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக்கு சென்றார். சேறு, சகதியில் மிதிக்காமல் செல்வதற்காக சாக்கு மூடைகளை அடுக்கி வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அந்த சாக்கு மூடைகளில் மிதித்து உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாவலர்கள் அருகே சகதியில் மிதித்தபடி அவருக்கு இருபுறமும் சென்றார். ஒரு இடத்தில் பாதுகாவலர் ஒருவர் கால்தவறி கீழே விழப்போனார். அப்போது அவருக்கு பின்னால் வந்தவர் உதவினார். இதையடுத்து மீண்டும் அந்த பாதுகாவலர் நடக்க முயன்றபோது நிலைத்தடுமாறினார். இதை பக்கத்தில் நின்று பார்த்த உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தனது கைகளை நீட்டினார். இதையடுத்து அந்த பாதுகாவலர் உதயநிதி ஸ்டாலினின் கைகளை பிடித்து தொடர்ந்து நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications