5 கோடி அசையா சொத்து பற்றி ராஜலட்சுமி உடைக்கும் ரகசியம்.. பணத்திலேயே புரளும் பெண் போலீஸ்? உண்மை என்ன
சென்னை: இன்னும் ராஜலட்சுமி விவகாரத்தின் பரபரப்பு அடங்கவில்லை.. சென்னையில் பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ராஜலட்சுமிக்கு எப்படி இவ்வளவு சொத்து? எங்கிருந்து வந்துது? இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்ற சந்தேகங்கள் வலுத்து வருகின்றன.. ஆனால் தன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி சுமத்துவதாக ராஜலட்சுமி தரப்பு சொல்கிறதாம்...!!!
தொடர் லஞ்ச புகார்கள் ராஜலட்சுமி மீது வந்தவண்ணம் இருந்ததால், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்..

இந்த சோதனையை தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், தற்போது அதிகாரிகளுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது..
யாரிந்த ராஜலட்சுமி
யாரிந்த ராஜலட்சுமி? ராஜலட்சுமி கடந்த 1999-ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கினார்.. அதன் பின்னர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு என பல்வேறு முக்கியத் துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார்..
அவர் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பெரும் அளவில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது..
இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 2017 முதல் 2025 வரையிலான எட்டு ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது..
அசையா சொத்து
லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு வெறும் 3.64 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது.. ஆனால், 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அது 4.62 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது..
அவரது கணக்கிடப்பட்ட வருமானத்தை விட 5.42 கோடி ரூபாய் அளவுக்குக் கூடுதலாகச் சொத்து சேர்த்துள்ளதும், இது அவரது சாதாரண வருமானத்தை விட 372 சதவீதம் அதிகம் என்பதும் போலீசாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும், 80 லட்ச ரூபாய் சேமிப்பாக வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை ஆய்வாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.. இது குறித்து அவர் சொல்லும்போது, தன் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய பொய்ப் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்.,

குறிப்பாக, தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலாவுக்கும் தமக்கும் இடையே ஏற்கனவே தொழில்முறை ரீதியான கசப்பான சம்பவங்கள் இருந்ததாம்..
பெண் போலீஸ் ராஜலட்சுமி
விமலா விரும்பிய பதவி கிடைக்காததற்கும், அவரது கணவர் மீது தான் எடுத்த நடவடிக்கைகளுக்கும் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்..
தன்னிடம் ஒரே ஒரு வீடு மட்டுமே இருப்பதாகவும், அதுவும் வங்கிக் கடனில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ராஜலட்சுமி, சோதனை முடிவில் அதிகாரிகள் தன்னிடம் எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி தந்துவிட்டு சென்றதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா வேண்டுமென்றே ஊடகங்களுக்கு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இதனை நீதிமன்றத்தின் மூலம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்து வருகிறாராம்..
ராஜலட்சுமி விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளதால், இதில் யார் சொல்வது உண்மை, என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.. இது தொடர்பாகச் சென்னை மாநகரக் காவல் துறை உயர்மட்ட அதிகாரிகள் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. விரைவில் உண்மையை வெளிக்கொணருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications