மும்மொழிக் கொள்கையில் அரசியல் கூடாது! NEP-யை ஏற்றால் நிதி! தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் அட்வைஸ்
சென்னை: மும்மொழிக் கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது என தமிழக அரசுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே சமக்ர சிக்ஷா நிதியை ஒதுக்கீடு செய்வோம் என்று பிரதான் மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: கல்வி நிதி விவகாரம் குறித்து இரு ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விஷயத்தை தமிழக அரசு அரசியல் விவகாரமாக பார்க்கிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். தேசியக் கல்விக் கொள்கையை நாடே ஏற்றுக் கொண்டது. ஆனால் தமிழக அரசு மறுக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு கல்விக்கு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது.
மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
கல்வி நிதி விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் திமுக எம்பி கனிமொழியும் என்னை சந்தித்து பேசினர். அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். அதாவது மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை வழங்குவோம் என்று!
இது மாணவர்களின் நலன் சார்ந்த விஷயம் என்பதால் இதில் அரசியல் செய்யக் கூடாது. இருதரப்பும் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு, மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது.
மும்மொழியை கற்பதில் என்ன பிரச்சினை? 1 முதல் 5 ஆம் வகுப்புகளில் இருந்து இரு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் இருந்து 3 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஒன்று தாய்மொழி, மற்ற இரண்டு மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பட்டியலில் இருக்கும் எதையும் படித்துக் கொள்ளலாம். தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக் கூடாது. இரு மொழிக் கொள்கை என்பதை அரசியல் நிலைப்பாடாக திமுக வைத்துள்ளது. தமிழக மாநில பாடத்திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தாய்மொழியுடன் ஏதாவது ஒரு இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். 3ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்கச் சொல்கிறோம். எனவே மத்திய அரசு எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தேசியக் கல்வி 3ஆவது மொழியை ஊக்குவிக்கிறது.
மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மாணவர்கள் 10 மொழிகளை கற்க வேண்டும் என கூறியுள்ளார். இவ்வாறு தர்மேந்திர பிரான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications