Oneindia Exclusive: மத்திய அரசின் பகீர் பாரபட்சம்! சமஸ்கிருதத்துக்கு 2,000 கோடி! தமிழுக்கு 100 கோடி!
சென்னை: இன்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அள்ளிக் கொடுத்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள், கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு 2 ஆயிரம் கோடியும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வெறும் 100 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான பிரத்யேக தகவல்கள் "ஒன்இந்தியாதமிழுக்கு" கிடைத்துள்ளது.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் உயர் கல்வித் துறை குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து செலவிட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மொழிகளுக்கும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது குறித்து, மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் "மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர்" ஈஸ்வரன் தகவல் பெற்றிருந்தார்.

அதில், மத்திய அரசு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக கடந்த பத்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், மற்ற பிராந்திய மொழிகளுக்கு சொற்பமான தொகையையே ஒதுக்கீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் கிள்ளிக் கொடுத்துவிட்டு, சமஸ்கிருதத்துக்கு மட்டும் மத்திய பாஜக அரசு அள்ளிக் கொடுப்பது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகால டேட்டா: இதுகுறித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில் 2013-14 முதல் 2022 - 2023 வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் டெல்லிக்கு 2,029 கோடி ரூபாயும், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் திருப்பதிக்கு 406 கோடி ரூபாயும் என மொத்தமாக 2,435 கோடி ரூபாய் மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்ட தொகையைவிட தற்போது இரண்டரை மடங்கு தொகை அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு செலவிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 7 சதவீதம் மட்டுமே.
உருது மொழி: இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிகளுக்கு செலவிடும் தொகையைவிட, பலமடங்கு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செலவிடப்படுவது இதன் மூலமாகத் தெரியவந்துள்ளது. மேலும், ஹிந்தி மொழியைவிட சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல, உருது மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 774 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்படுவதைவிட தற்போது 57 சதவீதம் மட்டுமே இந்த மொழிக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. மத்திய ஹிந்தி இயக்குநரகத்திற்காக கடந்த 10 ஆண்டுகளில் 251 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்ட தொகையைவிட தற்போது 25 சதவீதம் செலவு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய ஹிந்தி கல்வி நிறுவனம் ஆக்ராவிற்காக, கடந்த 10 ஆண்டுகளில் 395 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவிட்டு வந்த தொகையைவிட 60 சதவீதம் மட்டுமே தற்போது செலவு அதிகரித்துள்ளது

ஹிந்தியை விட முக்கியத்துவம்: CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES MYSORE, நிறுவனம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்படும் தொகை 42.83 கோடிதான். ஆனால், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் திருப்பதிக்கு செலவிடப்படும் தொகை 63.95 கோடி. அனைத்து மொழிகளுக்குமான பல்கலைக்கழகத்திற்கு செலவழிக்கும் தொகையைவிட அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு செலவிடப்படுகிறது.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மக்களும் பேசக்கூடிய ஹிந்தி தமிழ் உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய அக்கறையைவிட பலமடங்கு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமஸ்கிருத வளர்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சர் நேரடியாக தலையிட்டு சமஸ்கிருத பல்கலைக்கழகங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து பாடத்திட்டங்களிலும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தாய்மொழி வளர்ச்சி: அதேபோல, மத்திய கல்வி அமைச்சர் மத்திய அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை மற்றும் ஒவ்வொரு மாநில மொழிகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஏன் அறிவிக்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களும் வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அந்தந்த மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசுகின்ற மக்களிடையே அந்த மக்கள் நேசிக்கும் மொழியை அவர்களின் தாய் மொழியை அந்தந்தப் பகுதிகளில் வளர்ப்பது மத்திய அரசின் கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியையும், அந்தந்த மாநில மொழிகளையும் வளர்க்கக்கூடிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் வரி வசூல் செய்து கொண்டு சமஸ்கிருதத்தை மட்டுமே இந்திய அளவில் வளர்ப்பேன் என்று மத்திய அரசாங்கம் பிடிவாதம் பிடிப்பதும், புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது. அதனால், மக்களின் வரிப்பணத்தை சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே செலவு செய்யாமல் அனைத்து பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
கட்டுரையாளர்: பவித்ரா












Click it and Unblock the Notifications