‛ஒரே நாடு ஒரே தேர்தல்’.. தமிழக அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய மத்திய உள்துறை அமைச்சகம்.. பின்னணி
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. இந்த கடிதத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

இதற்கிடையே தான் மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளது. தற்போது சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடக்கின்றன. இதற்கு பதிலாக அனைத்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை ஆளும் முதல்வர் ஸ்டாலினின் திமுகவும் இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு முக்கிய கடிதம் எழுதப்பட்டுள்ளது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து தமிழக அரசு தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆராய க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். குழுவில் மத்திய அமைச்சர் அமித் அஷா, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா மாஜி காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு நாடாளுமன்றத்தில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழு அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும் நம் நாட்டில் இதற்கு முன்பு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை நடைமுறையில் இருந்தது. 1951ம் ஆண்டு முதல் 1967 முதல் நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. அதன்பிறகு தான் இந்த முறை கைவிடப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதால் அதிகப்படியான செலவு வருகிறது. மேலும் காவல்துறை, அரசு ஊழியர்களுக்கு பணி நெருக்கடி வருகிறது.
அதுமட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications