தண்ணீரில் மாட்டு சாணம்.. இதுதான் திமுகவின் சமூக நீதியா? பதில் சொல்லுங்க..பட்டியல் போட்ட எல்.முருகன்
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட சம்பவம்,
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை வெறியாட்டம் எனவும், இந்த சம்பவத்தை தமிழக அரசு திசைதிருப்ப முயல்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச் சாணம் கலக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேங்கை வயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
மாட்டு சாணம்: ஆனால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேங்கை வயல் போன்ற கொடூரத்தை போலி திராவிட மாடல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதால் தான் இதபோன்ற கொடுமைகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளது மிக கொடூரமான செயலாகும். பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழகஅரசு தொடர்ந்து தவறிவருகிறது.
கடும் கண்டனங்கள்: அது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளநிலையில் அதனை ஆய்வு செய்த அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது. திமுக அரசின் இந்த செயல், மனித நாகரீகம் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாத மிருக தனத்தை நியாயப்படுத்துவது போல் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக அரசு : மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடி நீர்த் தொட்டியை கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் தமிழக அரசின்பணி. ஆனால் திமுக அரசு தனது கடமையை செய்யத் தவறிவிட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மூடி மவுனமாக இருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் அத்து மீறல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
கொடூரங்கள்: திமுக அரசு பதவியேற்று ஏறக்குறைய 3 ஆண்டுகளை தொடவுள்ள நிலையில் தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் கொடூரங்கள் கொஞ்சமல்ல. இதற்கு மு.க. ஸ்டாலின் பதில் சொல்லட்டும். வேங்கைவாசல் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பலப் பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறதே இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று. இதனை கண்டு காணாமல் இருப்பது தான் திமுகவின் சமூக நீதியா?
கடும் தண்டனை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது செயல். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர திமுக அரசும், காவல்துறையும் முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications